சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் ஆடித்திருவிழா


சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் ஆடித்திருவிழா
x
தினத்தந்தி 5 July 2023 8:26 PM GMT (Updated: 6 July 2023 12:08 PM GMT)

சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் ஆடித்திருவிழாமுகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது

சேலம்

சேலம்

ஆடித்திருவிழாவை முன்னிட்டு சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் நேற்று முகூர்த்தக்கால் நடப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.

கோட்டை மாரியம்மன் கோவில்

சேலம் மாவட்டத்தில் ஆடி மாதம் என்றாலே அம்மன் கோவில்களில் திருவிழாக்கள் களை கட்டுவது வழக்கம். சேலம் மாநகரில் உள்ள அனைத்து மாரியம்மன் கோவில்களுக்கும், தாய் கோவிலாக கோட்டை மாரியம்மன் கோவில் விளங்குகிறது. பிரசித்திபெற்ற இந்த கோவிலில் ஆடித்திருவிழாவை முன்னிட்டு நேற்று காலை முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதையொட்டி உற்சவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு பூஜை நடந்தது. தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட முகூர்த்தக்காலுக்கு பூஜை செய்து கோவில் வளாகத்தில் நடப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். மேலும் இந்த நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் சபர்மதி, உதவி ஆணையர் ராஜா, செயல் அலுவலர் அமுதசுரபி, மாநகராட்சி பணிக்குழு தலைவர் சாந்தமூர்த்தி, அறங்காவலர் குழு உறுப்பினர்கள் ரமேஷ்பாபு, ஜெய், சுரேஷ்குமார் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

பூச்சாட்டுதல்

ஆடித்திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியான வருகிற 25-ந் தேதி பூச்சாட்டுதல் நிகழ்ச்சியும், அடுத்த மாதம் (ஆகஸ்டு) 7-ந் தேதி சக்தி அழைப்பும், 9-ந் தேதி முதல் 11-ந் தேதி வரை தினமும் பொங்கல் வைத்து வைத்தல், மாவிளக்கு எடுத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சியும், 15-ந் தேதி பால்குட ஊர்வலமும், உற்சவர் அம்மனுக்கு அபிஷேகம், அலங்கார ஆராதனை மற்றும் அன்னதானம் உள்ளிட்டவை நடைபெறுகிறது.

திருவிழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர். கோட்டை மாரியம்மனுக்கு பூச்சாட்டுதல் நடந்த பின்னர் தான் அன்னதானப்பட்டி, அம்மாபேட்டை, செவ்வாய்பேட்டை, நெத்திமேடு, குகை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 8 மாரியம்மன் கோவில்களில் ஆடித்திருவிழா தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story