பெட்ரோல் பங்க்குகளில் விவசாயிகளுக்கு கேனில் டீசல் வழங்கக்கோரி கலெக்டரிடம் மனு


பெட்ரோல் பங்க்குகளில் விவசாயிகளுக்கு கேனில் டீசல் வழங்கக்கோரி கலெக்டரிடம் மனு
x

வேளாண் பணிக்காக பெட்ரோல் பங்க்குகளில் கேனில் டீசல் வழங்க அனுமதிக்க வேண்டும் என்று கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் மனு அளித்தனர்.

திருநெல்வேலி

நெல்லை:

நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டர் விஷ்ணு தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். பாளையங்கோட்டை அருகே சிவந்திபட்டி, முத்தூர், சுற்றுவட்டார பகுதி விவசாயிகள், பொதுமக்கள், தமிழக மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட தலைவர் கண்மணிமாவீரன், மாநகர செயலாளர் துரைப்பாண்டியன், மாவட்ட இளைஞரணி செயலாளர் முத்துப்பாண்டியன் ஆகியோர் தலைமையில், கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் வழங்கிய மனுவில், தமிழக அரசு தற்போது பெட்ரோல் பங்க்குகளில் பெட்ரோல், டீசலை பாட்டில், கேன்களில் வழங்கக்கூடாது என உத்தரவிட்டிருந்தது. எங்கள் பகுதியில் இருந்து மாநகர எல்லையில் உள்ள பெட்ரோல் பங்குகள் சுமார் 10 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. இதனால் அங்கு நெல் அறுவடை எந்திரம், மருந்து அடிக்கும் எந்திரம், டிராக்டர்களைக் கொண்டு செல்ல சிரமமாக உள்ளது. எனவே விவசாயிகள் பெட்ரோல் பங்க்குகளில் அடையாள அட்டை காண்பித்து பெட்ரோல்- டீசலை கேன், பாட்டிலில் பெற்று கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று தெரிவித்து இருந்தனர்.

நாம் தமிழர் கட்சியினர் மானூர் ஒன்றிய செயலாளர் மதன்ராஜூ தலைமையில் வழங்கிய மனுவில், மானூர் யூனியன் திருப்பணிகரிசல்குளம் கிராமத்தில் பள்ளிக்கூடம், கோவில் அருகில் உள்ள டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு இடமாற்றம் செய்ய வேண்டும் என்று கூறி உள்ளனர்.

பாளையங்கோட்டை அருகே மேலகுளம் மேலூர் ஊர் பொதுமக்கள் தலைவர் பெரியபெருமாள், செயலாளர் பெருமாள், பொருளாளர் ராமகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் வழங்கிய மனுவில், எங்கள் ஊரில் உள்ள இடுகாடு, மயானம் செல்லும் பாதையில் உள்ள ஆக்கிரமிப்பு, கோவில் அருகே உள்ள ஆக்கிரமிப்பையும் உடனே அகற்ற வேண்டும் என்று கூறியுள்ளனர்.

நெல்லை மாவட்ட கூட்ஸ் டிரான்ஸ்போர்ட் அசோசியேஷன் நிர்வாகிகள் தலைவர் நம்பிராஜன் தலைமையில் வழங்கிய மனுவில், கங்கைகொண்டானில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் நாங்கள் லாரியில் சரக்கு ஏற்றி இறக்கி தொழில் செய்தோம். இந்த நிலையில் டிரான்ஸ்போர்ட் மின்னணு ஏல முறையை அமல்படுத்த உள்ளனர். இதனை உடனே ரத்து செய்ய வேண்டும். உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

ராமையன்பட்டி பஞ்சாயத்து துணைத்தலைவர் செல்வகுமார், வார்டு உறுப்பினரும் மாவீரர் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்க தலைவருமான மாரியப்பபாண்டியன் ஆகியோர் கொடுத்த மனுவில், கடந்த ஒரு ஆண்டாக பஞ்சாயத்து நிதியில் இருந்து எந்த பணியும் நடைபெறவில்லை. பணிகள் நடைபெற்று வருவதாக கணக்கு காட்டப்பட்டுள்ளது. அடிபம்பு பழுதுபார்த்தல், மின் உதிரி பாகங்கள் வாங்கும் வகையில் முறைகேடுகள் நடந்துள்ளது என்று கூறியுள்ளனர். பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலக நுழைவாயிலில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.


Next Story