ஓமலூர் கோல்காரன்வளவு அருகேகூட்டு குடிநீர் திட்ட குழாய் வால்வு உடைந்தது40 அடி உயரத்துக்கு தண்ணீர் பீய்ச்சி அடித்ததால் பரபரப்பு


ஓமலூர் கோல்காரன்வளவு அருகேகூட்டு குடிநீர் திட்ட குழாய் வால்வு உடைந்தது40 அடி உயரத்துக்கு தண்ணீர் பீய்ச்சி அடித்ததால் பரபரப்பு
x
சேலம்

ஓமலூர்

ஓமலூர் கோல்காரன் வளவு அருகில் கூட்டுகுடிநீர் திட்ட குழாய் வால்வு உடைந்தது. இதனால் 40 அடி உயரத்துக்கு தண்ணீர் பீய்ச்சி அடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

குடிநீர் வால்வு

சேலம் மாவட்டம் மேட்டூர், ஆத்தூர், நரசிங்கபுரம் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் பயன்பெறும் கிராமங்களுக்கு ராட்சத குழாய்கள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த ராட்சத குழாய், ஓமலூரை அடுத்த பெரியேரிப்பட்டி, ரெட்டிபட்டி, திண்டமங்கலம் வழியாக செல்கிறது. இந்த குழாய் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டதாக தெரிகிறது.

இதற்கிடையே இந்த குடிநீர் திட்டத்துக்கான வால்வு, கோல்காரன் வளவு அருகே உள்ளது. இந்த வால்வு நேற்று மாலை 3 மணி அளவில் திடீரென உடைந்து தண்ணீர் வெளியேறியது. சுமார் 40 அடி உயரத்துக்கு தண்ணீர் பீய்ச்சி அடித்தது.

தண்ணீர் பீய்ச்சி அடித்தது

இதனால் வால்வில் இருந்து வெளியேறிய தண்ணீர் அங்குள்ள விவசாய நிலங்கள் வழியாக ஊருக்குள் புகுந்தது. தகவல் அறிந்த தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்கள், கூட்டுக் குடிநீர் திட்ட நீரேற்று நிலைய மோட்டார்களின் இயக்கத்தை நிறுத்தினர்.

அப்படி இருந்தும் சுமார் 2 மணி நேரம் குடிநீர் குழாயில் இருந்து தண்ணீர் பீய்ச்சி அடித்தது. தண்ணீர் வேகமாக வெளியேறியதால் நீரேற்று நிலைய அறையின் ஒரு பகுதி சேதம் அடைந்தது. பின்னர் படிப்படியாக தண்ணீர் வெளியேற்றம் குறைந்தது.

சரிசெய்யும் பணி

தகவல் அறிந்த கூட்டுக் குடிநீர் திட்ட உதவி நிர்வாகப் பொறியாளர் புவனேஸ்வரி,உதவி பொறியாளர் தமிழரசி மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

பின்னர் சேதம் அடைந்த நீரேற்று நிலையத்தை பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அகற்றினர். பின்னர் குடிநீர் குழாயின் வால்வை சரிசெய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.


Next Story