நான்கு வழிச்சாலையை பசுமைச்சாலையாக மாற்றும் திட்டம்


நான்கு வழிச்சாலையை பசுமைச்சாலையாக மாற்றும் திட்டம்
x

நான்கு வழிச்சாலையை பசுமைச்சாலையாக மாற்றும் திட்டம்

திருப்பூர்

போடிப்பட்டி,


நான்கு வழிச்சாலையை பசுமைச்சாலையாக மாற்றும் வகையில் மரக்கன்றுகள் நடவு செய்யும் பணிகள் தொடங்கியுள்ளது.

பசுமை சாலைகள்

மரங்கள் என்பவை வெறும் நிழல் தருவதற்கானவையாக மட்டுமல்லாமல் சுத்தமான காற்றை வழங்குவதிலும் மழைப்பொழிவிலும் தங்கள் பங்களிப்பை வழங்கி வருகின்றன. அதேநேரத்தில் நகரமயமாதல் மற்றும் சாலை மேம்பாட்டுப்பணிகளின் போது பெருமளவில் மரங்கள் அழிக்கப்படுவதாக புகார் எழுந்து வருகிறது. குறிப்பாக புதிய சாலைகள் அமைக்கப்படும் போதும், விரிவாக்கப் பணிகள் மேற்கொள்ளும்போதும் பெருமளவு மரங்களை அகற்ற வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இந்தநிலையில் மத்திய அரசின் பாரத்மாலா பரியோஜனா திட்டத்தில் நாடு முழுவதும் அதிவேக நான்கு வழிச்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

அந்த சாலைகளை பசுமை வழிச்சாலைகளாக அமைக்க வேண்டும் என்பதில் அரசு தீவிரம் காட்டி வருகிறது. அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டம் பொள்ளாச்சி முதல் திண்டுக்கல் மாவட்டம் கமலாபுரம் வரை அமைக்கப்பட்டு வரும் நான்கு வழிச்சாலைகளின் இரு கரைகளிலும் மரக்கன்றுகள் நட்டு வளர்க்கவும் மையத்தடுப்புகளில் மலர்ச்செடிகள் வளர்க்கவும் திட்டமிட்டுள்ளது.

3 லட்சம் மரங்கள்

75 வது ஆண்டு சுதந்திர தினத்தையொட்டி தொடங்கப்பட்ட ஆஷாதிகா அம்ருத் மஹோத்சவ் திட்டத்தில், இந்தியா முழுவதும் ஒரே நாளில் 300 பகுதிகளில் 3 லட்சம் மரங்கள் நடவு செய்யப்பட்டன. அதில் மடத்துக்குளத்தையடுத்த மைவாடி பகுதியிலிருந்து தொடங்கி பொள்ளாச்சி வரை ஒரே நாளில் 1000 மரக்கன்றுகள் நடவு செய்யும் திட்டம் தொடங்கியது. இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம், மதுரை கோட்டத்தின் சார்பில் தொடங்கப்பட்ட மரக்கன்றுகள் நடவு செய்யும் பணிகளை மடத்துக்குளம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் தேவி மற்றும் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணைய மதுரை கோட்ட துணை பொது மேலாளர் ஹரிகுமார் (தொழில் நுட்பம்) ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

இந்த திட்டத்தில் சாலையின் இருபுறங்களிலும் 3 அடுக்குகளாக மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டு வருகின்றன. மேலும் மரக்கன்றுகளை பாதுகாத்து மரங்களாக உருவாக்கும் வகையில் தனி துறை உருவாக்கப்பட்டு பராமரிக்கப்படவுள்ளது. இதனால் நான்கு வழிச்சாலைகள் பசுமைச்சாலைகளாக உருவாக்கப்படவுள்ளது. இந்த மரக்கன்று நடும் நிகழ்ச்சியில் அதிகாரிகள் மற்றும் உடுமலை தனியார் பள்ளிகளின் மாணவர்கள் கலந்து கொண்டனர்.


Next Story