ராஜக்காபட்டி ஊராட்சியை பசுமை ஊராட்சியாக மாற்ற 10 ஆயிரம் மரக்கன்றுகள் நடவு


ராஜக்காபட்டி ஊராட்சியை பசுமை ஊராட்சியாக மாற்ற 10 ஆயிரம் மரக்கன்றுகள் நடவு
x

பசுமை ஊராட்சியாக மாற்ற 10 ஆயிரம் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டு உள்ளது என்று ராஜக்காபட்டி ஊராட்சி மன்ற தலைவி சித்ரா பால்ராஜ் தகவல் தெரிவித்து உள்ளார்.

மதுரை

உசிலம்பட்டி ,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ராஜக்காபட்டியில் ஊராட்சி தலைவராக இருப்பவர் சித்ரா பால்ராஜ். இந்த ஊராட்சியில் எம்.பாறைப்பட்டி, ராஜக்காபட்டி ஆகிய 2 கிராமங்கள் உள்ளன.

தனது மக்கள் பணி குறித்து ஊராட்சி மன்ற தலைவி சித்ரா பால்ராஜ் கூறியதாவது:-

எங்கள் பகுதி மிகவும் வறட்சியான பகுதி. அதை போக்க தொடர்ந்து மரக்கன்றுகள் நடவு செய்து அதன் மூலம் எங்கள் பகுதியை பசுமை மிக்க ஒரு பகுதியாக மாற்ற வேண்டும் என்பது எங்களுடைய தலையான நோக்கம் ஆகும். இதுவரை ஊராட்சியில் 10 ஆயிரம் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டு ஊராட்சி மன்றம் மூலம் பராமரிக்கப்பட்டு வருகிறது.

மேலும் எங்கள் பஞ்சாயத்திற்கு உட்பட்ட கிராமங்களில் குடும்பத் தலைவர் இறந்தால் அவரது இறுதி சடங்குக்கு சொந்த பணத்தில் ரூ.5 ஆயிரம் நிதி வழங்கி வருகிறோம்.

தார்ச்சாலை

மேலும் சடைனூத்து ஈஸ்வரன் மலைக்கோவிலுக்கு ரூ.4 லட்சத்தில் மின்விளக்கு வசதியும், இந்த கோவிலுக்கு ரூ.5 லட்சத்தில் தார் சாலையும் அமைக்கப்பட்டுள்ளது. ராஜக்காபட்டியில் சமயக்கருப்பு கோவில் பெட்டி வீடு அருகே ரூ.5 லட்சத்தில் பேவர் பிளாக் சாலை அமைக்கப்பட்டுள்ளது.

எம்.பாறைப்பட்டி கிராமத்திற்கு ரூ.1 லட்சத்தில் புதிதாக பைப்லைன் அமைத்து தடையின்றி குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் ரூ.5 லட்சத்தில் எம்.பாறைப்பட்டியில் வீடுதோறும் குடிநீர் இணைப்பு, இதே ஊரில் ரூ.2 லட்சத்தில் விநாயகர் கோவில் தெருவில் வீடுேதாறும் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

தடுப்பணைகள்

கொரோனா கால கட்டத்தில் தன்னார்வலர்கள் உதவியுடன் எங்கள் பஞ்சாயத்தில் உள்ள அனைத்து பொது மக்களுக்கும் உணவுப் பொருட்கள், கபசுர குடிநீர் வழங்கினோம். இதற்காக இப்போதைய ஆர்.டி.ஓ. ராஜ்குமார் எங்களை பாராட்டினார். ராஜக்காபட்டியில் உள்ள ஆதிதிராவிட மக்களுக்கு கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் தடையின்றி குடிநீர் கிடைக்க 2 இடங்களில் குடிநீர் பைப் லைன் அமைத்து தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. எங்கள் ஊராட்சியில் அனைத்து பகுதிகளிலும் எல்.இ.டி.விளக்குகள் பொருத்தப்பட்டு உள்ளன. ராஜக்காபட்டி தெற்கு தெருவில் ரூ.3¼ லட்சத்தில் பேவர் பிளாக் சாலை, பாறைப்பட்டி மேற்கு பகுதியில் உள்ள சடைனூத்து ஈஸ்வரன் கோவிலை சுற்றி மெட்டல் சாலை அமைக்கப்பட்டு உள்ளது. ராஜக்காபட்டி கிழக்கு பகுதியில் உள்ள ஆதிதிராவிடர் மக்களுக்காக ரூ.5 லட்சத்தில் சிமெண்ட் சாலையும், தாழையத்து ஓடையில் உள்ள தாழை மரங்களை பாதுகாக்க ரூ.7 லட்சத்தில் தடுப்பணையும், ராஜக்காபட்டி தொட்டராயன் ஓடையில் ரூ.5 லட்சத்தில் தடுப்பணையும் கட்டப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story