பா.ம.க. நிர்வாகி மீது நகராட்சி தலைவர்-பணியாளர்கள் புகார்
பா.ம.க. நிர்வாகி மீது நகராட்சி தலைவர்-பணியாளர்கள் புகார் அளித்துள்ளனர்.
ஜெயங்கொண்டம்:
ஜெயங்கொண்டம் நகர்மன்ற தலைவர் சுமதி சிவகுமார் மற்றும் நகராட்சி பணியாளர்கள் போலீஸ் துணை சூப்பிரண்டு ரவிச்சந்திரனை நேரில் சந்தித்து ஒரு புகார் மனு அளித்தனர். அதில், பா.ம.க. நகர செயலாளராக உள்ள பரசுராமன் என்பவர், நகராட்சியில் எடுக்கும் அனைத்து டெண்டருக்கும், கமிஷன் கேட்டு அனைத்து பிரிவு அலுவலர்களையும் மிரட்டுவதாகவும், பணி செய்ய விடாமல் தடுப்பதாகவும், மேலும் எந்தெந்த பிரிவுகளில் எவ்வளவு பணம் வரப்பெற்றுள்ளது எனவும், இறப்பு, பிறப்பு பதிவு எத்தனை வழங்கப்பட்டுள்ளது என்றும் கணக்கு கேட்பதாகவும், பிறப்பு, இறப்பு பிரிவில் பதிவுக்கு தலா ரூ.100 வீதம் பணம் வழங்க வேண்டும் என்று மிரட்டுவதாகவும், டெண்டர் பணிக்கு 10 சதவீத கமிஷன் வழங்க வேண்டும் என்று நகராட்சி மேலாளர், ஆணையர், நகர்மன்ற தலைவர் ஆகியோரை மிரட்டுவதாகவும் கூறியிருந்தனர். இதனால் நகராட்சி ஊழியர்கள் அனைவரும் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாகவும், நகராட்சி ஊழியர்கள் அனைவரும் பணி செய்ய முடியாமல் வேலையை விட்டு சென்று விடலாம் என்ற நிலையில் உள்ளதாகவும், எனவே பரசுராமன் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியிருந்தனர்.
ஏற்கனவே நேற்று முன்தினம் நர்மன்ற தலைவர் உள்ளிட்டோர் மீது புகார் தெரிவித்து பா.ம.க. நகர செயலாளர் பரசுராமன், போலீஸ் துணை சூப்பிரண்டிடம் புகார் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இரு தரப்பினரும் மாறி மாறி புகார் அளித்து வரும் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.