பள்ளி குழந்தைகள் மூலம் கண்காணிக்கும் புதிய திட்டம் - போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் தொடங்கி வைத்தார்


பள்ளி குழந்தைகள் மூலம் கண்காணிக்கும் புதிய திட்டம் - போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் தொடங்கி வைத்தார்
x

சென்னையில் சாலை பாதுகாப்பு விதிமுறைகள் கடைபிடிக்கப்படுகிறதா? என்பதை பள்ளி குழந்தைகள் மூலம் கண்காணிக்கும் புதிய திட்டத்தை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் தொடங்கிவைத்தார்.

சென்னை

சென்னையில் போக்குவரத்து போலீசாருடன் இணைந்து தமிழ்நாடு போக்குவரத்து பாதுகாவலர்கள் அமைப்பினரும் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். திருவிழாக்கள், பண்டிகை காலங்கள் போன்ற நேரங்களில் போக்குவரத்தை சீர்படுத்துவதற்காக 250 பள்ளிகளை சேர்ந்த 7 முதல் 12-ம் வகுப்பு படிக்கும் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் சாலை பாதுகாப்பு ரோந்து வீரர்களாக அங்கீகரிக்கப்பட்டு உள்ளனர்.

இந்த நிலையில் சென்னையில் சாலை பாதுகாப்பு விதிமுறைகள் முறையாக கடைபிடிக்கப்படுகிறதா? என்பதை 1 முதல் 7-ம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகள் மூலம் கண்காணிக்கும் 'சூப்பர் கிட் காப்' என்ற புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

இதன் தொடக்க விழா சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளிக்கூடத்தில் நேற்று நடைபெற்றது. விழாவில் சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் கலந்துகொண்டு இந்த திட்டத்தை தொடங்கிவைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் போக்குவரத்து கூடுதல் போலீஸ் கமிஷனர் கபில்குமார் சரத்கர், தமிழ்நாடு போக்குவரத்து பாதுகாவலர்கள் அமைப்பின் தலைவர் ஹரீஷ் மேத்தா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இந்த திட்டம் குறித்து சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

இந்த திட்டத்தின் கீழ் ஒரு லட்சம் பள்ளி குழந்தைகளுக்கு கார்டு (அறிக்கை அட்டை) வழங்கப்படும். குழந்தைகள் வெளியே செல்லும்போது, சாலையில் வாகன ஓட்டிகள் தலைகவசம் அணிந்து செல்கிறார்களா?, 'சீட்' பெல்ட் அணிந்திருக்கிறார்களா? உள்பட 12 அம்ச சாலை பாதுகாப்பு விதிமுறைளை கண்காணித்து கார்டில் குறித்துக்கொள்வார்கள். 15 நாட்களுக்கு பின்னர் அவர்களிடம் இந்த கார்டை வாங்கி அவர்களது கருத்துகள் ஆராயப்படும். இதன் மூலம் தமிழ்நாடு போக்குவரத்து பாதுகாவலர்கள் எண்ணிக்கையை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

'பீக் அவர்' நேரங்களில் வாகனங்கள் எண்ணிக்கை அதிகம் இருப்பதால் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் கையில் ஒருவழிப்பாதைகளை தொடர்ந்து அறிமுகம் செய்து வருகிறோம். முதல்-அமைச்சர் தொடங்கி வைத்துள்ள செயலி மூலம் சென்னையில் எந்த இடத்தில் 3 நிமிடத்துக்கு மேல் போக்குவரத்து நெரிசல் இருக்கிறது என்பதை 'கூகுள் மேப்'பில் தகவல் வாங்கி ஆராயப்படும்.

பருவமழையை எதிர்கொள்ள அனைத்து வசதிகளை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு அறையை அமைக்க இருக்கிறோம். எனவே இந்த ஆண்டு பருவமழையை எளிதில் எதிர்கொண்டுவிடலாம் என்ற நம்பிக்கை இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில் சாலை பாதுகாப்பு விவகாரத்தில் சிறப்பாக செயலாற்றிய 10 தலைமை ஆசிரியர்கள், 10 போக்குவரத்து போலீசார், 9 போக்குவரத்து பாதுகாவலர்கள், சாலை பாதுகாப்பு ரோந்து வீரர்கள் 20 பேருக்கு கமிஷனர் சங்கர் ஜிவால் விருதுகளை வழங்கி கவுரவித்தார்.


Next Story