போலீசார் கண்ணில் மிளகாய்பொடி தூவி கைதி தப்பி ஓட்டம் - தூத்துக்குடியில் பரபரப்பு


போலீசார் கண்ணில் மிளகாய்பொடி தூவி கைதி தப்பி ஓட்டம் - தூத்துக்குடியில் பரபரப்பு
x

தூத்துக்குடியில் போலீசார் கண்ணில் மிளகாய்பொடியை தூவி கைதி தப்பி ஓடினார்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி சுந்தரவேல்புரத்தை சேர்ந்தவர் சின்னத்துரை. இவருடைய மகன் ஐகோர்ட் மகாராஜா (வயது 30). இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. கடந்த மாதம் 20-ந் தேதி விளாத்திகுளம்-வேம்பார் ரோட்டில் உள்ள ஒரு கடை முன்பு வைத்து ஒருவரை அரிவாளால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் விளாத்திகுளம் போலீசார் ஐகோர்ட் மகாராஜாவை கைது செய்தனர். தொடர்ந்து கடந்த 1-ந் தேதி அவரை குண்டர் தடுப்பு சட்டத்திலும் கைது செய்தனர்.

இந்தநிலையில் விளாத்திகுளம் ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் அவர் மீதான கொலை முயற்சி வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் ஐகோர்ட் மகாராஜாவை ஆஜர்படுத்துவதற்காக பேரூரணி ஜெயிலில் இருந்து ஆயுதப்படை போலீஸ்காரர்கள் 2 பேர் பஸ்சில் அழைத்து வந்தனர்.

விளாத்திகுளம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி விட்டு மீண்டும் மாலையில் பஸ்சில் விளாத்திகுளத்தில் இருந்து தூத்துக்குடி புதிய பஸ்நிலையத்துக்கு வந்து இறங்கினர். அங்கு இருந்து தூத்துக்குடி பேரூரணி ஜெயிலில் அடைப்பதற்காக ஐகோர்ட் மகாராஜாவை அழைத்துச் செல்ல முயன்றனர்.

அவர்கள் பழைய பஸ்நிலையத்துக்கு செல்வதற்காக தயாரான போது, ஐகோர்ட் மகாராஜா திடீரென, போலீசாரின் கண்ணில் மிளகாய் பொடியை தூவி விட்டு தப்பி ஓடினார். இதனால் போலீசார் சற்று நிலை குலைந்தனர். இருப்பினும் அவரை பிடிப்பதற்காக விரட்டிச் சென்றனர். ஆனால் முடியவில்லை.

இதுகுறித்த புகாரின் பேரில் தூத்துக்குடி வடபாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஐகோர்ட் மகாராஜாவுக்கு மிளகாய் பொடி கிடைத்தது எப்படி? என விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தப்பி ஓடிய ஐகோர்ட் மகாராஜாவை பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர். இச்சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

1 More update

Next Story