விருத்தாசலத்தில் ஊராட்சி மன்ற தலைவர் வீட்டில் ரூ.6 லட்சம் நகைகள் கொள்ளை மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு


விருத்தாசலத்தில் ஊராட்சி மன்ற தலைவர் வீட்டில் ரூ.6 லட்சம் நகைகள் கொள்ளை மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
x

விருத்தாசலத்தில் ஊராட்சி மன்ற தலைவர் வீட்டில் ரூ.6 லட்சம் நகைகள் கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கடலூர்

விருத்தாசலம்,

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பாலாஜி நகரில் வசித்து வருபவர் சவுந்தரராஜன்(வயது 55). இவர் இலங்கியனூர் ஊராட்சி மன்ற தலைவராக இருந்து வருகிறார். இவருடைய மனைவி கல்பனா(50) சென்னையில் தங்கியிருந்து ராயப்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார். சவுந்தரராஜன், சொந்த ஊரான இலங்கியனூருக்கு சென்றிருந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் நேற்று வீட்டில் வேலை பார்க்கும் பெண் ஒருவர் வழக்கம்போல் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைந்து கிடந்தது. பின்னர் இதுகுறித்து அவர் உடனடியாக செல்போன் மூலம் கல்பனாவுக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் அவர் விரைந்து வந்து வீட்டிற்குள் சென்று பார்த்தபோது பொருட்கள் அனைத்தும் சிதறிக்கிடந்தன. மேலும் பீரோ உடைக்கப்பட்டு கிடந்தது. அதில் வைத்திருந்த 14 பவுன் நகைகளை காணவில்லை.

ரூ.6 லட்சம் நகைகள்

வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட மா்மநபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து ரூ.6 லட்சம் மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்து சென்றிருப்பது தெரியவந்தது. மேலும் வீட்டில் இருந்த கண்காணிப்பு கேமராவில் தங்களின் உருவம் பதிவாகியிருக்கும் என்று எண்ணிய கொள்ளையர்கள் கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் ஹார்டு டிஸ்க்கு உள்ளிட்ட பொருட்களை உடைத்து திருடிச்சென்றுள்ளனர். இதுகுறித்து விருத்தாசலம் போலீசார் விசாரணை நடத்தி மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story