பொங்கல் பரிசில் கரும்பு, வெல்லத்துக்கு இடம் இல்லை


பொங்கல் பரிசில் கரும்பு, வெல்லத்துக்கு இடம் இல்லை
x
திருப்பூர்


தமிழக அரசு வழங்கும் பொங்கல் பரிசுத் திட்டத்தில் செங்கரும்புக்கும் வெல்லத்துக்கும் இடம் இல்லாததால் விவசாயிகள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

ஏமாற்றம்

ஆண்டுதோறும் தமிழக அரசு சார்பில் ரேஷன் கடைகள் மூலம் பொங்கல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.இந்த பரிசுத் திட்டத்தில் சூழ்நிலைக்கு ஏற்ப அரசு மாற்றங்கள் செய்து வழங்கி வருகிறது. அந்தவகையில் இந்த ஆண்டில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ 1000 பணத்துடன் பச்சரிசி மற்றும் சர்க்கரை வழங்குவதாக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனால் கடந்த ஆண்டைப் போல கரும்பு மற்றும் வெல்லம் வழங்கப்படும் என்று எதிர்பார்த்திருந்த விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக கரும்பு வழங்குவதற்காக அந்தந்த மாவட்ட அளவில் உள்ள விவசாயிகளிடம் கொள்முதல் செய்ய வேண்டும் என்று விவசாயிகளின் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

விலை குறையும்

கடந்த ஆண்டைப்போல அரசு கொள்முதல் செய்யும்.இதனால் கரும்புக்கு நல்ல விலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் பல பகுதி விவசாயிகள் செங்கரும்பு பயிரிட்டிருந்தனர். ஆனால் அரசு பொங்கல் பரிசில் கரும்பு அறிவிக்காததால் குறைந்த விலைக்கு கரும்பை விற்க வேண்டிய நிலை ஏற்படும். அதுமட்டுமல்லாமல் பொங்கலுக்கு முக்கியமான வெல்லத்துக்குப் பதிலாக வெள்ளை சர்க்கரை வழங்குவதும் ஏற்புடையதில்லை.

இதனால் ஏராளமான விவசாயிகள் மற்றும் வெல்லம் உற்பத்தியாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் நிலை உள்ளது. ஆண்டு முழுவதும் ரேஷன் கடையில் வெள்ளை சர்க்கரைக்குப் பதிலாக அச்சு வெல்லம் அல்லது கருப்பட்டி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது. ஆனால் பொங்கலுக்கும் வெல்லம் வழங்காதது ஏமாற்றமளிப்பதாக உள்ளது. எனவே அந்தந்த மாவட்ட அளவில் கரும்பு கொள்முதல் செய்து ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு வழங்குவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

கரும்பு சாகுபடிப் பரப்பு அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் அரசு கொள்முதல் இல்லாததால் பொங்கல் சமயத்தில் வெளிச்சந்தையில் கரும்பு விலை குறையும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.


Next Story