சேவகபெருமாள் கோவிலில் பூப்பல்லக்கு திருவிழா

சேவகபெருமாள் கோவிலில் பூப்பல்லக்கு திருவிழா நடைபெற்றது
சிங்கம்புணரி
சிங்கம்புணரியில் உள்ள சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட சேவக பெருமாள் அய்யனார் பூரண புஷ்கலா தேவியார் ேகாவிலில் வைகாசி விசாக திருவிழா ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மாதம் வெகு சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டு வைகாசி மாதம் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றதால் இந்த திருவிழா ஆனி மாதத்தில் நடந்தது.
அதன்படி கடந்த 25-ந் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. இதையொட்டி தினமும் பல்வேறு வெள்ளி வாகனங்களில் சுவாமி வீதி உலா நிகழ்ச்சி, திருக்கல்யாணம், கழுவன் திருவிழா, தேரோட்டம் நடைபெற்றது.
திருவிழாவின் நிறைவு நாளான நேற்று முன்தினம் இரவு பூப்பல்லக்கு திருவிழா நடந்தது. இதையொட்டி வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பூ பல்லக்கில் சேவகபெருமாள் அய்யனார் உடனான பூரண புஷ்கலா தேவியார் கோவில் மண்டபத்திலிருந்து பல்லக்கில் எழுந்தருளினர். தொடர்ந்து நான்கு ரத வீதிகள் வழியாக பூ பல்லக்கில் சாமி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர் சுவாமிக்கு சிறப்பு தீபாராதனைகள் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து நேற்று காலை 7 மணி அளவில் காப்பு இறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், சிங்கம்புணரி சிவாச்சாரியார்கள் சின்னையா, கதிரேசன், அருணகிரி, சேதுராமலிங்கம், செந்தில் கணேசன், சேவற்கொடியேன், கணேசன் உள்ளிட்டோர் மற்றும் கோவில் பரம்பரை பூஜகர்கள் உடன் இருந்தனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சிவகங்கை தேவஸ்தானம் சமஸ்தானம் ராணி மதுராந்தகி நாச்சியார் உத்தரவுக்கிணங்க கோவில் கண்காணிப்பாளர் தண்ணாயிரம், பேஸ்கர் கரிகாலன், கணக்கர் கலைசெல்வன் மற்றும் சிங்கம்புணரி கிராமத்தார்கள், அடைக்கலம் காத்த நாட்டார்கள், பரம்பரை ஸ்தானிகம் சிவாச்சாரியார்கள் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.






