பாலத்தை இணைக்கும் சாலையில் ஆபத்தை விளைவிக்கும் பள்ளங்கள்
கூடலூர்-வேடன்வயல் இடையே பாலத்தை இணைக்கும் சாலையில் ஆபத்தை விளைவிக்கும் பள்ளங்கள் உள்ளன. இதனால் வாகன ஓட்டிகள் அச்சத்தில் உள்ளனர்.
கூடலூர்
கூடலூர்-வேடன்வயல் இடையே பாலத்தை இணைக்கும் சாலையில் ஆபத்தை விளைவிக்கும் பள்ளங்கள் உள்ளன. இதனால் வாகன ஓட்டிகள் அச்சத்தில் உள்ளனர்.
வாய்க்கால் பாலம்
கூடலூர் நகரில் இருந்து 1-ம் மைல் வழியாக வேடன் வயல், தட்டக்கொல்லி, செளுக்காடி உள்பட பல்வேறு பகுதிகளுக்கு சாலை செல்கிறது. இந்த பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் அத்தியாவசிய மற்றும் அவசர தேவைகளுக்காக கூடலூர் நகருக்கு வந்து செல்கின்றனர்.
இந்த நிலையில் 1-ம் மைல் பகுதியில் உள்ள ஆற்று வாய்க்காலில் மழைக்காலத்தில் சாலையை மூழ்கடித்தபடி தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவது வழக்கம். இதனால் அங்கு பாலம் கட்டப்பட்டது. அந்த பாலம் மூலம் பொதுமக்கள் வாய்க்காலை கடந்து வருகின்றனர்.
ஆபத்தான பள்ளங்கள்
இதற்கிடையில் கடந்த ஆண்டு பெய்த கன மழையில் பாலத்தின் இருபுறமும் பெரிய அளவில் மண் அரிப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக அங்கு சாலையையும், பாலத்தையும் இணைக்கும் பகுதியில் ஆபத்தான பள்ளங்கள் காணப்படுகிறது. இந்த பள்ளங்களை புதர்கள் சூழ்ந்துள்ளது. இதனால் அந்த வழியாக செல்பவர்களுக்கு பள்ளம் இருப்பதே தெரிவது இல்லை. இதன் காரணமாக அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மட்டுமின்றி பாதசாரிகளும் அச்சம் அடைந்து உள்ளனர். மேலும் அந்த பள்ளத்தை மூட வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் அதற்கு நடவடிக்கை எடுக்காமல், இரும்பு தடுப்புகள் மட்டும் வைக்கப்பட்டது.
உரிய நடவடிக்ைக
தற்போது அந்த இரும்பு தடுப்புகளும் அகற்றப்பட்டு உள்ளது. இதனால் அங்கு எந்தவித பாதுகாப்பும் இன்றி உள்ளது. இதுகுறித்து உள்ளூர் வாகன ஓட்டிகள் கூறும்போது, அந்த பகுதியில் பள்ளங்கள் இருப்பது உள்ளூரை சேர்ந்தவர்களுக்கு தெரியும். ஆனாலும் சில நேரங்களில் விபத்துகள் ஏற்படுகிறது. ஆனால் வெளியூர்களில் இருந்து வரும் வாகன ஓட்டிகள் 1-ம் மைலில் இருந்து வேடன் வயலுக்கு செல்லும் பாலத்தை கடக்க முயலும்போது ஆபத்தான பள்ளங்களை அறியாமல் பெரும் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. இதுகுறித்து அதிகாரிகளிடம் தெரிவித்தும், உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே அசம்பாவித சம்பவங்கள் நிகழும் முன், அந்த பள்ளங்களை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.