பிரபாகரன் உயிருடன் இல்லை: இலங்கை ராணுவம் மறுப்பு
தமிழக அரசும் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கட்சிகளும் தமிழக மக்களும் ஒன்றுபட்டு நின்று தமிழின தேசிய தலைவர் பிரபாகரனுக்கு துணை நிற்குமாறு வேண்டிக் கேட்கிறோம்.
சென்னை
தஞ்சாவூர் அருகே விளாரில் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் உலகத் தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-
நம்முடைய தமிழக தேசியத் தலைவர் பிரபாகரன் பற்றிய ஒரு உண்மையை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். சர்வதேச சூழலும் ராஜபக்சே ஆட்சிக்கு எதிராக வெடித்து கிளம்பிய இலங்கை மக்களின் போராட்ட சூழலில் தமிழ் தேசிய தலைவர் வெளிப்படுவதற்கான உகந்த சூழ்நிலையை உருவாக்கி உள்ளது.
இந்தச் சூழலில் தமிழின தேசியத் தலைவர் பிரபாகரன் மிக்க நலமுடன் இருக்கிறார் என்ற செய்தியை உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுக்கு உறுதியாக தெரிவிப்பதில் நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.
இதுவரை அவரைப் பற்றி திட்டமிட்டு பரப்பிய யூகங்களுக்கும், ஐயங்களுக்கும் இந்தச் செய்தி மூலம் உறுதியான முற்றுப்புள்ளி வைக்கும் என நம்புகிறேன்.
தமிழின மக்களின் விடுதலைக்கான திட்டத்தினை அவர் விரைவில் அறிவிக்க இருப்பதை உங்களுக்கு தெரிவிக்கிறேன். தமிழின மக்களும், உலகத் தமிழர்களும் ஒன்றுபட்டு நின்று அவருக்கு முழுமையான ஆதரவினை அளிக்க முன்வருமாறு வேண்டிக் கொள்கிறேன்.
விடுதலைப் புலிகள் வலிமையாக இருந்த காலம்வரை இந்தியாவுக்கு எதிரான நாடுகள் எதையும் தங்கள் மண்ணில் காலூன்ற அவர்கள் அனுமதிக்கவில்லை. இந்தியாவுக்கு எதிரான நாடுகள் எதுவாக இருந்தாலும், எந்தக் காலகட்டத்திலும் அவர்களிடமிருந்து எத்தகைய உதவியும் பெறுவதில்லை என்பதில் தமிழின தேசியத் தலைவர் பிரபாகரன் மிக உறுதியாக இருந்தார்.
இப்போது இலங்கையில் ஆழமாக காலூன்றி இந்தியாவுக்கு எதிரான களமாக மாற்றும் முயற்சியில் சீனா ஈடுபட்டுள்ளது. இந்து மகாகடலின் சீனாவின் ஆதிக்கம் செலுத்தும் அபாயம் இருப்பதையும் எண்ணிப் பார்த்து அதனை தடுக்கும் வகையில் உறுதியான நடவடிக்கையை இந்திய அரசு மேற்கொள்ள வேண்டும்.
இந்த முக்கியமான காலகட்டத்தில் தமிழக அரசும் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கட்சிகளும் தமிழக மக்களும் ஒன்றுபட்டு நின்று தமிழின தேசிய தலைவர் பிரபாகரனுக்கு துணை நிற்குமாறு வேண்டிக் கேட்கிறோம்.
பிரபாகரனின் குடும்பத்தினருடன் எனக்கு தொடர்பு இருக்கிறது. அந்தத் தொடர்பின் மூலம் அறிந்த செய்தியை அவருடைய அனுமதியின் பேரில் இங்கே வெளியிடுகிறேன் என கூறினார்.
ஆனால், பிரபாகரன் உயிருடன் இருப்பது குறித்த செய்திகளை இலங்கை ராணுவம் முற்றிலுமாக மறுத்துள்ளது.
பிரபாகரன் நலமுடன் இருப்பதாகக் கூறப்படுவது குறித்து இலங்கை ராணுவத்தின் செய்து தொடர்பாளர் பிரிகேடியர் ரவி ஹேரத் பிபிசியிடம் கூறியதாவது:-
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இறுதிக்கட்ட போரில் கொல்லப்பட்டுவிட்டதற்கான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளது.
2009ஆம் ஆண்டு நடந்த இறுதிக்கட்ட போரில் பிரபாகரன் கொல்லப்பட்டார். டி.என்.ஏ ஆதாரங்களையும் நாங்கள் எடுத்துள்ளோம். 2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் தேதி இறுதிக்கட்ட போரில் அவர் கொல்லப்பட்டார்.தவறான தகவல்களை அவர்கள் வெளியிடுகின்றார்கள்.
இது எங்களுக்கு எந்தவித எச்சரிக்கை உணர்வையும் ஏற்படுத்தவில்லை. ஏனெனில் எங்களுக்கு அவர் கொல்லப்பட்டுவிட்டார் என்பது தெளிவாகத் தெரியும், அதில் சந்தேகமே இல்லை என்று தெரிவித்தார்.