பயிர்களை பாதுகாக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை


பயிர்களை பாதுகாக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை
x
தினத்தந்தி 1 Nov 2022 6:45 PM GMT (Updated: 1 Nov 2022 6:45 PM GMT)

விழுப்புரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையில் இருந்து பயிர்களை பாதுகாக்க சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை விவசாயிகள் கடைபிடிக்க வேண்டுமென வேளாண்மை இணை இயக்குனர் பெரியசாமி அறிவுரை கூறியுள்ளார்

விழுப்புரம்

விழுப்புரம்

விழுப்புரம் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் பெரியசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

வடகிழக்கு பருவமழை

விழுப்புரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை 638 மி.மீ. இயல்புக்கு இதுவரை 102 மி.மீ. மழை பெறப்பட்டுள்ளது. தற்போது பருவமழையின் தாக்கம் தீவிரமடைந்துள்ளதால் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாரங்களிலும் மழைப்பொழிவு பெறப்பட்டு வருகிறது.

வடகிழக்கு பருவமழையின் தாக்கத்தை எதிர்கொள்ள விவசாயிகள், சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அதற்கு விவசாயிகள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் விவரம் வருமாறு:-

பயிர்களை காப்பாற்ற

மழைநீர் சூழ்ந்துள்ள வயல்களில் உடனடியாக வடிகால் வசதி ஏற்படுத்தி நீரை வடித்து, வேர்ப்பகுதிக்கு காற்றோட்டம் கிடைக்கச்செய்தல், நீரில் மூழ்கிய பயிரில் ஊட்டச்சத்து பற்றாக்குறை தென்பட வாய்ப்புள்ளது. இதை நிவர்த்தி செய்ய ஏக்கருக்கு 22 கிலோ யூரியா, 18 கிலோ ஜிப்சம் இவற்றுடன் 4 கிலோ வேப்பம் புண்ணாக்கு கலந்து, ஒரு இரவு முழுவதும் வைத்து தண்ணீர் வடிந்தவுடன் வயலில் இட வேண்டும்.

மேலும் போதிய சூரிய வெளிச்சம் தென்பட்டவுடன், ஏக்கருக்கு 2 கிலோ யூரியாவுடன், 1 கிலோ ஜிங்க் சல்பேட் உரங்களை 200 லிட்டர் தண்ணீரில் கரைத்து கைத்தெளிப்பான் மூலம் இலைவழி உரமாக தெளிக்க வேண்டும். தண்டு உருளும் பருவம் மற்றும் பூக்கும் பருவத்தில் உள்ள பயிர்களுக்கு ஏக்கருக்கு 4 கிலோ டி.ஏ.பி. உரத்தை 10 லிட்டர் தண்ணீரில் முதல் நாள் ஊறவைத்து மறுநாள் வடிகட்டி, கரைசலுடன் 2 கிலோ யூரியா மற்றும் 1 கிலோ பொட்டாஷ் உரத்தை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து மாலை வேளையில் கைத்தெளிப்பான் கொண்டு தெளித்து மகசூல் இழப்பை தவிர்க்கும்படி விவசாயிகள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். பூச்சி தாக்குதல் பொருளாதார சேத நிலைக்கு மேல் போகும்போது வேம்பு சார்ந்த மருந்துகளை வேளாண் துறையின் பரிந்துரையின்படி உபயோகப்படுத்த அறிவுறுத்தப்படுகிறது.

தென்னை மரம்

தென்னை தோட்டத்தில் முதிர்ச்சியடைந்த, முதிர்ச்சியடைய உள்ள தேங்காய் மற்றும் இளநீர் ஆகியவற்றை புயல் தொடங்குவதற்கு முன் அறுவடை செய்ய வேண்டும். கீழ் சுற்றில் உள்ள கனமான ஓலைகளை வெட்டி அகற்ற வேண்டும். இதன் மூலம், நுனியில் உள்ள மரத்தின் பாரம் குறைக்கப்பட்டு, புயல் காற்று தென்னை மரத்தை கடக்கும்போது அடிப்பாகத்துக்கு எந்த சேதமும் ஏற்படாமல் மரத்தை பாதுகாக்கலாம். சாத்தியமான இடங்களில், நிற்கும் மரங்களுக்கு அவற்றின் அடிப்பாகத்தை சுற்றி மண்ணைக்குவித்து கூடுதல் உறுதித்தன்மையை ஏற்படுத்தலாம். தென்னை மரங்களுக்கு நீர்பாசனம் செய்வதையும் மற்றும் உரம் இடுவதையும் தற்காலிகமாக தவிர்த்து மரங்களின் வேர்களை மண்ணுடன் உறுதிப்படுத்தி அவற்றை புயல் பாதிப்பினால் சேதமடைவதை தவிர்க்கலாம்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Next Story