அனைத்து சாதியினரும் அர்ச்சகர் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்


அனைத்து சாதியினரும் அர்ச்சகர் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
x

இந்து சமய அறநிலையத்துறையின் நடவடிக்கையால் பக்தர்கள் மனநிறைவு அடைந்துள்ளனர் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

சென்னை,

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 34 ஜோடிகளுக்கு நடைபெற்ற திருமண விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திட்டத்தை திமுக அரசு கொண்டு வந்துள்ளது. சாதியால் யாரையும் தள்ளிவைக்கக் கூடாது என்ற நோக்கில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் யாராக இருந்தாலும் எந்த சாதியாக இருந்தாலும் அர்ச்சகர் ஆகலாம்.

பட்டியலினத்தை சேர்ந்த 17 பேரை கோவில் அர்ச்சகர்கள் ஆக்கியுள்ளோம். அனைத்து சாதியினர் அர்ச்சகர் ஆகும் திட்டத்தை தமிழகத்தை பார்த்து ராஜஸ்தான் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களும் பின்பற்றுகின்றன. சாதியின் பெயரால் யாரையும் பிரித்து வைக்க கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம்.

இந்து சமய அறநிலையத்துறையை கொண்டு வந்ததே திராவிட அரசு தான். ஏராளமான கோவில்களுக்கு குடமுழுக்கு உள்ளிட்ட பணிகளை திமுக அரசு மேற்கொண்டுள்ளது. அனைத்து துறைகளிலும் அனைவரும் கோலோச்ச வேண்டும் என்பதே திமுக அரசின் நோக்கம். இந்தாண்டில் ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட கோவில்களில் திருப்பணிகள் நடைபெற உள்ளன. மேலும் பல்வேறு கோவில்களில் திருப்பணிகளை செய்ய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்து சமய அறநிலையத்துறையின் நடவடிக்கையால் பக்தர்கள் மனநிறைவு அடைந்துள்ளனர். இந்த துறைக்கு இந்து சமய துறை என்று பெயர் அல்ல; இந்து சமய அறநிலையத்துறை என்று பெயர். அதனால் தான் அறம் சார்ந்த தொண்டுகள் செய்யப்படுகின்றன. இது போன்ற அறப்பணிகளை தொடர்ந்து செய்ய வேண்டும் என்றும் நாம் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். என்று கூறினார்.

தொடர்ந்து "பிறக்கும் குழந்தைகளுக்கு அழகான தமிழ் பெயரை சூட்டுங்கள்" என்று மணமக்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரை வழங்கினார்.


Next Story