பசுமை போர்வையை அதிகரிக்கச்செய்யும் நோக்கில்வனத்துறை மூலம் 1 லட்சம் மரக்கன்றுகள் உற்பத்திபொதுமக்கள், விவசாயிகள் இலவசமாக பெறலாம்
விழுப்புரம் மாவட்டத்தில் பசுமை போர்வையை அதிகரிக்கச்செய்யும் நோக்கில் வனத்துறை மூலம் 1 லட்சம் மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. இவற்றை பொதுமக்கள், விவசாயிகள் இலவசமாக பெறலாம்.
1 லட்சம் மரக்கன்றுகள் உற்பத்தி
தமிழ்நாட்டின் பசுமை போர்வையை உயர்த்தவும், பசுமை போர்வையை அதிகரிக்க செய்ய வேண்டும் என்றும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இதன் அடிப்படையில் விழுப்புரம் மாவட்டத்தில் மாவட்ட வன அலுவலரின் வழிகாட்டுதலின்படி, பசுமை போர்வையை அதிகரிக்கச் செய்யும் நோக்கில் கண்டாச்சிபுரம் அருகே தமிழ்நாடு வனத்துறைக்கு சொந்தமான அடுக்கம் பகுதியில் மரக்கன்றுகளை இலவசமாக வழங்க நபார்டு திட்டத்தின் கீழ் விழுப்புரம் வனச்சரகத்தின் மூலம் 1 லட்சம் மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன.
இலவசமாக பெறலாம்
மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் பயன்பெறுவதோடு மட்டுமின்றி பொது இடங்கள், அரசு நிலங்கள், பள்ளிகள், கல்லூரிகள் பயன்பெறும் வகையில் அடுக்கம் மத்திய நாற்றங்காலில் தேக்கு, வேங்கை, பூவரசு, ஈட்டி, மகாகனி, பலா, இலுப்பை, நாவல், புங்கன், நீர்மருது, புளியன், வேம்பு, பாதாம் போன்ற மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. எனவே பொதுமக்கள், விவசாயிகள், இந்த மரக்கன்றுகளை இலவசமாக பெற்று பயன்பெறுமாறு வனத்துறை அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர். மேலும் விவரங்களுக்கு விழுப்புரம் வனச்சரக அலுவலர் கமலக்கண்ணன்- 94442 42611, கண்டாச்சிபுரம் வனவர் சுகுமார்- 99626 37936, விழுப்புரம் வனச்சரக வனக்காப்பாளர் விஜயலட்சுமி- 97918 65927 ஆகியோரை தொடர்பு கொள்ளலாம் என்றும் வனத்துறை அறிவுறுத்தியுள்ளது.