பல கோடி ரூபாய் சொத்து அபகரிப்பு; ஒருவர் கைது
பட்டுக்கோட்டையில் பல கோடி ரூபாய் சொத்தை அபகரித்ததாக ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தஞ்சாவூர்;
பட்டுக்கோட்டையில் பல கோடி ரூபாய் சொத்தை அபகரித்ததாக ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சொத்து பிரச்சினை
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை ரெயில் நிலைய பகுதியை சேர்ந்தவர் ஜெயரத்தினம்(வயது 50). இவர், சிங்கப்பூரில் பணியாற்றி வருகிறார். இவருக்கு சொந்தமான இடம் நாடியம்மாள்புரத்தில் உள்ளது. இந்த சொத்தில் பங்கு கேட்டு ஜெயரத்தினம் உறவினர்கள் அவ்வப்போது தகராறு செய்து வந்தனர்.இந்த விவரத்தை தனது குடும்ப நண்பரான பாப்பாநாடு கிராமத்தை சேர்ந்தவரும், தற்சமயம் சென்னை அசோக் நகரில் வசித்து வருபவருமான சிவாவிடம் தெரிவித்தார். அதற்கு அவர் இந்த சொத்தை எனது பெயருக்கு ஒரு பொது அதிகார ஆவணம் எழுதி வைத்தால் நான் பார்த்துக் கொள்கிறேன் என தெரிவித்தார்.
நண்பர் பெயருக்கு பவர் எழுதி வைத்தார்
நண்பர்தானே கேட்கிறார் என நம்பிய ஜெயரத்தினம் தனது பெயரில் இருந்த சொத்தை சிவா பெயருக்கு பவர் எழுதி வைத்தார். அதன் பின்னர் ஜெயரத்தினத்துக்கு தெரியாமல் அந்த இடத்தை சிவா தனது உறவினரிடம் அடமானம் வைத்து உள்ளார்.பின்னர் அந்த இடம் 2 பேருக்கு கிரயம் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் ஜெயரத்தினத்திற்கு தெரிய வந்ததால் பலமுறை சிவாவிடம் இடத்தை காலி செய்யுமாறு கேட்டு உள்ளார். அதற்கு அவர் மறுத்து விட்டதாக தெரிகிறது.
ஒருவர் கைது
இது குறித்து ஜெயரத்தினம் தஞ்சை மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் மனு கொடுத்தார். அதில் நம்பிக்கை மோசடி செய்து பல கோடி ரூபாய் மதிப்புள்ள எனது சொத்துக்களை ரூ.16 லட்சத்திற்கு விற்பனை செய்ததாக ஆவணங்களை 3 பேரும் ஏற்படுத்தி எனது சொத்தை அபகரித்து விட்டனர். எனவே அவர்கள் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுத்து சொத்தை மீட்டு தர வேண்டும் என கூறியிருந்தார்.அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ரவி, சப்-இன்ஸ்பெக்டர் ஆசைத்தம்பி ஆகியோர் விசாரணை செய்து சிவா உள்ளிட்ட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்தநிலையில் சிவாவை(48) போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி தஞ்சை கிளை சிறையில் அடைத்தனர்.