ஓட்டல்களில் விற்பனைக்கு வைத்திருந்த புரோட்டா, சிக்கன் பறிமுதல்
முந்தைய நாளில் தயாரித்து ஓட்டல்களில் விற்பனைக்கு வைத்திருந்த புரோட்டா, சிக்கன் பறிமுதல் செய்யப்பட்டது.
பாளையங்கோட்டை மண்டல உணவு பாதுகாப்பு அலுவலர் சங்கரலிங்கம், பாளையங்கோட்டை உயர் சிறப்பு அரசு மருத்துவமனை எதிரில் சீனிவாசநகர் பகுதியில் உள்ள உணவகங்களில், தரமான உணவு வழங்கப்படுகின்றதா? என்று நேற்று திடீர் ஆய்வு நடத்தினார்.
அப்போது அங்குள்ள ஒரு ஓட்டலில் முந்தைய நாள் தயாரித்த புரோட்டா 7 கிலோ, பொரித்த சிக்கன் 2 கிலோ, பிரைடு ரைஸ் 4½ கிலோ, நூடுல்ஸ் ½ கிலோ ஆகியவை குளிர்சாதன பெட்டியில் வைத்து, உடனடியாக தயாரித்த உணவு போல் வழங்க வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த உணவு பொருட்களை பறிமுதல் செய்து, பொதுமக்கள் முன்னிலையில் கிருமிநாசினி தெளித்து அழித்தார். அதேபோல், மற்றொரு கடையில் உணவுத்தரமில்லாத பிளாஸ்டிக் கவர்களில் உணவுப்பொருட்கள் பொதிந்து வைக்கப்பட்டிருந்தது. அந்த பிளாஸ்டிக் பைகள் மற்றும் பொட்டலமிடப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த உணவுப்பொருட்கள், கலப்பட தேயிலை ஆகியவை பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது. மற்றொரு ஓட்டலில் பிளாஸ்டிக் பைகள், அதில் பொதிந்து வைக்கப்பட்டிருந்த உணவு பொருட்கள் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது.