சாலையில் பாலை கொட்டி பொதுமக்கள் போராட்டம்

பாலை சாலையில் கொட்டி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உசிலம்பட்டி,
ஆவின் குளிரூட்டும் மையம்
உசிலம்பட்டி முதல் கே.பெருமாள்கோவில்பட்டி வழித்தடத்தில் உள்ள பாறைப்பட்டி, வில்லாணி, காராம்பட்டி, ரெங்கசாமிபட்டி, கொங்கபட்டி, எருமார்பட்டி உள்ளிட்ட 13 கிராமங்களிலிருந்து தினமும் 5000 லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு வாகனம் மூலம் மதுரை ஆவினுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் பாறைப்பட்டி கிராமத்தில் ஆவின் குளிரூட்டும் மையம் அமைத்து குளிரூட்டப்பட்டு மீண்டும் ஆவினுக்கு அனுப்பி வைக்க ஆவின் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி தினசரி சேகரிக்கப்படும் பாலை பாறைப்பட்டியில் அமையவுள்ள குளிரூட்டும் மையத்திற்கு வழங்குமாறு ஆவின் நிர்வாகமும் அறிவிப்பு வெளியிட்டு இன்று முதல் மதுரையிலிருந்து பாலை ஏற்ற வருகை தந்த வாகனமும் நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
போராட்டம்
இந்நிலையில் இந்த குளிரூட்டும் மையத்திற்கு பாலை அனுப்ப எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் எழுமலை பிரிவில் பாலை சாலையில் கொட்டி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தகவலறிந்து விரைந்து வந்த உசிலம்பட்டி காவல் ஆய்வாளர் விஜயபாஸ்கரன் தலைமையிலான போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை அடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது.இந்த சாலை மறியல் போராட்டத்தால் உசிலம்பட்டி பேரையூர் சாலையில் சுமார் அரைமணி நேரத்திற்கும் மேலாக கடுமையான போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பள்ளி, கல்லூரி, அலுவலகங்களுக்கு சென்றவர்கள் பெரிதும் சிரமப்பட்டனர்.






