கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்க எதிர்ப்பு: வாயில் கருப்பு துணி கட்டி போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள்- வாகனங்களில் ஊர்வலமாக சென்று ஆதரவு திரட்டிய விவசாயிகள்


கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்க எதிர்ப்பு: வாயில் கருப்பு துணி கட்டி போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள்- வாகனங்களில் ஊர்வலமாக சென்று ஆதரவு திரட்டிய விவசாயிகள்
x

கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வாயில் கருப்பு துணிைய கட்டி பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். விவசாயிகள் வாகனங்களில் ஊர்வலமாக சென்று ஆதரவு திரட்டினர்.

ஈரோடு

நம்பியூர்

கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வாயில் கருப்பு துணிைய கட்டி பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். விவசாயிகள் வாகனங்களில் ஊர்வலமாக சென்று ஆதரவு திரட்டினர்.

6-வது நாள் போராட்டம்

ஈரோடு மாவட்டத்தில் முக்கிய பாசன வாய்க்காலாக இருக்கும் கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்க கூடாது. அவ்வாறு அமைத்தால் கசிவுநீர் விவசாயம் பாதிக்கப்படும். விவசாய கிணறுகளில் தண்ணீர் ஊற்று எடுக்காது என்று ஒரு தரப்பு விவசாயிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்தநிலையில் கடந்த 6-ந் தேதி நம்பியூர் அருகே உள்ள எலத்தூர் செட்டிபாளையத்தில் கீழ்பவானி வாய்க்காலில் கரைகளில் கான்கிரீட் சுவர் அமைக்கும் பணி தொடங்கப்பட்டது.

இதுகுறித்து தகவல் கிடைத்ததும் அந்த பகுதி விவசாயிகள் அங்கு திரண்டு சென்று கான்கிரீட் அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தினர்.

மேலும் அங்கு எந்த பணிகளும் நடைபெற கூடாது என்று அங்கேயே பந்தல் அமைத்து காத்திருப்பு போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.

பேச்சுவார்த்தை தோல்வி

போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து நேற்று முன்தினம் எலத்தூர், செட்டிபாளையம், ஆண்டிபாளையம், கடத்தூர், அரசூர், குருமந்தூர், கரட்டுபாளையம் உள்பட அந்த பகுதியில் உள்ள 8 கிராமங்களில் 300-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டன. இதையடுத்து பொதுப்பணி துறை அதிகாரி ஆனந்தராஜ், மாவட்ட போலீஸ் கூடுதல் சூப்பிரண்டு தங்கவேல், நம்பியூர் தாசில்தார் மாலதி ஆகியோர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு இருந்த விவசாயிகளிடம் போராட்டத்தை கைவிடக்கோரி பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

இதைத்தொடர்ந்து விவசாயிகள் கீழ்பவானி வாய்க்காலில் சுவர் அமைப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தை மூடவேண்டும். கீழ்பவானி வாய்க்காலில் எந்த இடத்திலும் கான்கீரிட் அமைக்க கூடாது என்று காத்திருப்பு போராட்டத்தை தொடர்ந்தனர்.

வாயில் கருப்பு துணி

நேற்று நடந்த 6-வது நாள் போராட்டத்தில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டனர். அவ்வாறு பங்கேற்ற பெண்கள் வாயில் கருப்பு துணி கட்டியிருந்தனர்.

இதேபோல் விவசாயிகள் கீழ்பவானி வாய்க்கால் செல்லும் இடங்களுக்கு இருசக்கர வாகனங்களில் சென்று ஆதரவு திரட்டினர். மேலும் ஊர்வலத்தில் சென்றவர்கள், 'வேண்டாம், வேண்டாம் கான்கிரீட் வேண்டாம், மண் வாய்க்கால் வேண்டும். தடுக்காதே தடுக்காதே கசிவுநீரை தடுக்காதே' போன்ற வாசகங்கள் எழுதிய பதாகைகளையும் கைகளில் வைத்திருந்தனர்.


Next Story