தற்கொலைகளை தடுக்க மனநல ஆலோசனை வகுப்புகள்


தற்கொலைகளை தடுக்க மனநல ஆலோசனை வகுப்புகள்
x
தினத்தந்தி 22 Dec 2022 12:30 AM IST (Updated: 22 Dec 2022 12:30 AM IST)
t-max-icont-min-icon

பள்ளிகளில் தற்கொலைகளை தடுக்க மனநல ஆலோசனை வகுப்புகளை நடைமுறைப்படுத்துவதற்கான திட்டம் ஏற்கனவே வகுக்கப்பட்டாலும், அது பெயர் அளவிலேயே இருக்கிறது. அதனை மீண்டும் முறைப்படுத்த வேண்டிய அவசியம் இப்போது எழுந்து இருக்கிறது. இதுபற்றி ஆசிரியர்கள், பெற்றோர், மனநல ஆலோசகரிடம் கேட்டபோது அவர்கள் தெரிவித்த கருத்துகள் வருமாறு:-

தேனி

தன் மீதும், சக மனிதர்கள் மீதும், சுற்றியுள்ள சமூகத்தின் மீதும் இருக்கும் நம்பிக்கையை முற்றிலும் இழக்கும் ஒருவர்தான், தற்கொலை முடிவை எடுக்கிறார்.

அந்தநேரத்தில் சக மனிதர்களும், சுற்றியுள்ள சமூகமும் சம்பந்தப்பட்ட நபருக்கு செவிசாய்க்கும் பட்சத்தில், உடனடியாக அவர் அந்த முடிவில் இருந்து மனம் மாறிவிடுகிறார். ஆனால் தற்போது நாம் வாழும் சமூகத்தில் அதற்கான வாய்ப்பு தாமதம் ஆவதாலே தற்கொலை சம்பவங்கள் நிகழ்ந்து விடுவதாக மனநல ஆலோசகர்கள் கூறுகிறார்கள்.

தற்கொலை எண்ணம் கொண்ட ஒருவர், அவரது நடவடிக்கைகள் மூலம் பல்வேறு வகைகளில் சுற்றியுள்ளவர்களிடம் அதை வெளிப்படுத்துவார். அதை நண்பர்களோ, உறவினர்களோ உடனே உணர்ந்து கொண்டால் அவர்களின் எண்ணங்களை மாற்றி நல்வழிப் படுத்திவிட முடியும். இன்றைய நாகரிக உலகில் அதை யாரும் கண்டுகொள்வதில்லை. இதுவும் தற்கொலை சம்பவங்கள் அதிகரிப்புக்கு, அடித்தளமாக அமைந்து விடுகிறது.

காரணங்கள்

கடன் தொல்லை, வேலை கிடைக்கவில்லை, குடும்ப பிரச்சினை, திருமணம் சார்ந்த நிகழ்வுகளில் ஏமாற்றம், உடல்நிலை சரியில்லை, காதல் தோல்வி, போதை பழக்கத்துக்கு அடிமை, படிப்பில் சாதிக்க முடியாத நிலை, தேர்வுகளில் தோல்வி போன்றவைகளே பெரும்பாலான தற்கொலைகளுக்கு காரணங்களாக அமைகின்றன.

ஆன்லைன் விளையாட்டில் பணம் இழப்பவர்களின் தற்கொலைகளும் தற்போது புதிதாக இணைந்து இருக்கின்றன.

தற்கொலை செய்துகொள்வதில் பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள் எண்ணிக்கை அண்மைக்காலமாக அதிகரித்து வருவதும் வருத்தம் அளிக்கக்கூடியதாக இருக்கிறது.

தற்கொலை செய்துகொள்ளும் நபர்கள் தங்களை மட்டும் காயப்படுத்திக்கொள்வதில்லை. மாறாக, அவர்களைச் சார்ந்த குடும்பத்தினர், நண்பர்கள், உறவினர்களுக்கும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்திவிட்டு செல்கின்றனர். இதனால் ஏற்படும் துக்கத்தில் இருந்து மீளமுடியாமல் தவிப்பர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது.

புள்ளி விவரங்கள்

தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்ட புள்ளி விவரங்களின்படி, இந்தியாவில் ஆண்டுக்கு ஆண்டு தற்கொலைகளின் எண்ணிக்கை உயர்ந்து வருவதை காணமுடிகிறது.

கடந்த 2020-ம் ஆண்டில் 1 லட்சத்து 53 ஆயிரத்து 52 பேர் தற்கொலை செய்து கொண்டதாகவும், 2021-ம் ஆண்டு அது ஒரு லட்சத்து 64 ஆயிரத்து 33 ஆக உயர்ந்து இருப்பதுடன், அதில் 18 வயதுக்குட்பட்ட இளவயதினர் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இருப்பதாகவும் புள்ளிவிவரம் காட்டுகிறது.

தமிழ்நாடு 2-வது இடம்

இந்தியாவில் ஒட்டுமொத்த தற்கொலை சம்பவங்களில் தமிழ்நாடு 2-வது இடத்தில் இருக்கிறது.

தமிழகத்தைப் பொறுத்தவரையில் 2021-ம் ஆண்டில் 18 ஆயிரத்து 925 பேர் தற்கொலை செய்திருக்கிறார்கள். அவர்களில் 940 பேர் மாணவர் பருவத்தில் உள்ளவர்கள் என்பது வேதனையிலும் வேதனை.

இது ஒரு புறம் இருக்க 2022-ம் ஆண்டு ஜூன் மாதம் வரையிலான புள்ளி விவரங்களைப் பார்க்கும்போது, மேலும் அதிர்ச்சியைக் கொடுக்கிறது. அதில், 10 ஆயிரத்து 692 பேர் தற்கொலை செய்து கொண்டதில், 525 பேர் மாணவச் செல்வங்களாக இருக்கிறார்கள் என்பதைக் காணும்போது மேலும் மனவலியாக இருக்கிறது.

மனநல ஆலோசனை

மாணவச் சமுதாயத்தின் இதுபோன்ற தற்கொலை எண்ணங்களை தடுக்க என்னதான் செய்ய வேண்டும்? என்கிற கேள்வி நமக்குள் எழுகிறது.

அந்த கேள்விக்கு பதிலாக, மனநல ஆலோசனைகள் வழங்குவதன் மூலம், அவர்களைத் தற்கொலை முடிவுகளில் இருந்து விடுவிக்க முடியும் என்கின்றனர் மனநல ஆலோசகர்கள்.

பள்ளிகளில் மனநல ஆலோசனை வகுப்புகளை நடைமுறைப்படுத்துவதற்கான திட்டம் ஏற்கனவே வகுக்கப்பட்டாலும், அது பெயர் அளவிலேயே இருக்கிறது. அதனை மீண்டும் முறைப்படுத்த வேண்டிய அவசியம் இப்போது எழுந்து இருக்கிறது.

இதுபற்றி ஆசிரியர்கள், பெற்றோர், மனநல ஆலோசகரிடம் கேட்டபோது அவர்கள் தெரிவித்த கருத்துகள் வருமாறு:-

ஆரோக்கியமான உலகம்

பாலசரோஜா (ஆசிரியை, குன்னூர் அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளி) :- குழந்தைகளை மிகவும் செல்லமாக வளர்ப்பதில் பெற்றோர் ஆர்வம் காட்டுகின்றனர். வீடுகளில் குழந்தைகள் தவறு செய்தால் அதை சுட்டிக் காட்டி, நல்வழிப்படுத்த வேண்டும். இன்றைய மாணவப் பருவத்தினர் யாராவது திட்டினால் கூட ஏன் திட்டினார்கள்? என்று சிந்திப்பதை விடவும், நான்கு பேருக்கு முன்னால் திட்டி விட்டார்களே என்பதை அவமானமாகவும், அதீத விரக்தியாகவும் பார்க்கின்றனர். தேர்வில் தோற்றாலோ, தோற்று விடுவோம் என்ற அச்சத்தாலோ மாணவர்கள் தற்கொலை செய்வது வேதனையானது. தவறு செய்தால் அதை சுட்டிக் காட்டி அறிவுரைகள் வழங்கவும், சின்னச் சின்ன நற்செயல்களையும் பாராட்டி ஊக்கம் அளிக்கவும் பெற்றோரும், ஆசிரியர்களும் முன்வர வேண்டும். தேர்வுகளில் மட்டுமல்ல வாழ்விலும் ஏமாற்றம், தோல்வி, விமர்சனங்கள் எல்லாவற்றையும் எல்லாம் ஓர் அங்கம் என்ற புரிதலை ஏற்படுத்த வேண்டும்.

விஜயராஜ்காந்தி (ஆசிரியர், பொம்மிநாயக்கன்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி) :- இன்றைய இளைய தலைமுறையின் தேடுதல் யாவும் உடனடியாக எதுவும் கிடைத்துவிட வேண்டும் என்பதாக இருக்கிறது. இது பள்ளி, கல்லூரி என்று எங்கு சென்றாலும் மாணவர்களின் மனநிலை என்பது மாறுவதில்லை. ஓர் இசையை ரசிப்பதற்குக்கூட இவர்களுக்கு நேரமில்லை. வளரும் தொழில்நுட்பமும் இளைய தலைமுறைக்கு 'பாஸ்ட் புட்' போல அவர்களை அடிமைப்படுத்தி வைக்கக்கூடிய பல்வேறு விபரீத விளையாட்டுகளை உருவாக்கி வைக்கிறது. அவர்களை சிந்திக்க வைப்பதற்கு முயற்சிப்பதில்லை. அவர்களும் சிந்திக்க விழைவதில்லை. பெற்றோர், குடும்ப உறவுகளில் இருந்து மிகவும் தள்ளிப் போகின்றனர். அவர்களுக்கென ஓர் உலகம் அமைத்துக் கொள்கின்றனர். அங்கு அவர்கள்தான் தத்தமக்கு தீர்ப்பையும் வழங்கிக் கொள்கின்றனர். குற்றவாளியாகவும் நிற்கின்றனர். நேரடியாக அவர்களுக்கு அறிவுரை வழங்குவது நல்லவற்றைத் திணிப்பது போல இருக்கும். அதனை மாற்று வடிவில் கொடுக்கும் பட்சத்தில் மாணவர்கள் தற்கொலை போன்ற எண்ணங்களில் இருந்து விடுபடுவர். அவர்களும் ஆரோக்கியமான உலகத்திற்கு தம்முடைய பயணத்தைத் தொடங்குவர்.

டாக்டர் அறிவுரை

அப்துல்ஹக்கீம் (பெற்றோர், தேனி) :- இன்றைய குழந்தைகளுக்கு செல்போன் உலகமாக இருக்கிறது. சிலருக்கு நட்பு இருந்தாலும் அதில் தவறான நட்பாக வாழ்வை பாழாக்கிக் கொள்கின்றனர். ஆசிரியர்கள் சொல்வதையோ, பெற்றோர் சொல்வதையோ புரிந்து கொள்வது இல்லை. மாணவ, மாணவிகளின் தற்கொலை என்பது அவர்களின் பெற்றோருக்கு பேரிழப்பு. வாழ்நாள் முழுவதும் அவர்களுக்கு அந்த இழப்பின் வலி மனதில் இருந்து கொண்டே இருக்கும். குழந்தைகளுக்கு நல்ல கல்வி கிடைக்க வேண்டும் என்று நல்ல பள்ளிகளை தேடிச் சென்று சேர்ப்பதில் காட்டும் அக்கறையை, குழந்தைகளுக்கு நல்ல உறவினர்கள், நண்பர்களை அறிமுகம் செய்து வைப்பதிலும் காட்ட வேண்டும். பள்ளி, கல்லூரிகளில் பாடங்களோடு இணைந்து தோல்வி, ஏமாற்றம், விரக்தி போன்றவற்றை எதிர்கொண்டு வாழ்வில் வெற்றி பெறுவதற்கான வாழ்வியல் வகுப்புகளிலும் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

டாக்டர் ஆனந்தகிருஷ்ணகுமார் (மனோதத்துவத் துறை தலைவர், தேனி அரசு மருத்துவ கல்லூரி) :- குழந்தைகளை மன ஆரோக்கியத்துடன் வளர்ப்பதில் பெற்றோரின் பங்கு மிக முக்கியம். பெற்றோர்கள் நிறைய நேரம் குழந்தைகளோடு அமர்ந்து பேச வேண்டும். செல்போனில் அதிக நேரம் செலவிடுவதை தவிர்த்துவிட்டு குழந்தைகளோடு நேரம் செலவிட வேண்டும். குழந்தைகளை நிறைய பேசவிட்டு கேட்க வேண்டும். அடிப்பது, தகாத வார்த்தைகளால் பேசுவது போன்ற வடிவில் தண்டிக்காமல், அன்பாக பேசி அறிவுரைகள் கொடுக்க வேண்டும். குழந்தைகளின் செயல்களை கண்காணிக்க வேண்டும். உற்சாகமாக இல்லை, படிப்பில் கவனம் இல்லை, அடிக்கடி அழுவது, கோபப்படுவது போன்றவை இருந்தால் அது மனநல பிரச்சினைகளுக்கான அறிகுறி. அவற்றை ஆரம்ப நிலையில் கண்டறிந்து கவுன்சிலிங் கொடுக்க வேண்டும். மனநலம் சார்ந்த பிரச்சினை இருந்தால் தயக்கமின்றி மனநல டாக்டர், மனநல ஆலோசகரை அணுக வேண்டும். குழந்தைகளுக்கு அதிக மதிப்பெண் எடுக்க வேண்டும், இந்த படிப்பு தான் படிக்க வேண்டும் என்ற மன அழுத்தம் கொடுக்கக்கூடாது. அவர்களுக்கு எதில் ஆர்வமோ அந்த படிப்பை படிக்க உறுதுணையாக இருந்து வழிகாட்ட வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story