பாதை வேண்டி பொதுமக்கள் சாலை மறியல்


பாதை வேண்டி பொதுமக்கள் சாலை மறியல்
x

திருமங்கலம் அருகே புங்கங்குளம் கிராமத்தில் நடைபாதை வேண்டி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மதுரை

திருமங்கலம்

தகராறு

திருமங்கலம் அருகே புங்கங்குளம் கிராமத்தில் ஆதிதிராவிடர் காலனியில் 120-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. புங்கங்குளம் கிராமத்தில் இருந்து ஆதிதிராவிடர் காலனிக்கு ஆரம்ப காலத்தில் மாட்டு வண்டிப்பாதை இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் யு.டி.ஆர். நில அளவைக்கு பின்பு இந்தப் பாதை இல்லாமல் வயல் வெளியாக மாறியது. இது தொடர்பாக பலமுறை தாசில்தாரிடம் இப்பகுதி கிராம மக்கள் முறையிட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து சென்னை எழும்பூர் ஆவண காப்பகத்தில் இருந்து தகவல் பெறப்பட்டு வண்டிப்பாதை வரைபடத்தில் குறிப்பிட அனுமதி பெறப்பட்டுள்ளது. மேலும் பாதை அமைக்க மாவட்ட கலெக்டர் நிதி ஒதுக்கியுள்ளதாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து தாசில்தார் பாதையை அளக்க உத்தரவிட்டார்.இதனைத் தொடர்ந்து 30-க்கும் மேற்பட்ட போலீசார் புங்கங்குளம் கிராமத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அளவை நடைபெறும் இடத்திற்கு வந்த சர்வேயர் இடத்தை அளக்க முற்பட்டபோது எதிர் தரப்பைச் சேர்ந்தவர்கள் இந்த இடம் எங்கள் பெயரில் உள்ளது. ஆதலால் பாதை தர மாட்டோம் என தெரிவித்தனர். அத்துடன் இது குறித்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது என தெரிவித்தனர். இதனால் இருதரப்பினர் பிரச்சினை உருவாகும் சூழல் இருந்ததால் இருதரப்பினரும் தாசில்தாரிடம் வந்து முறையிடுங்கள் என தெரிவித்து சென்று விட்டார்.

மறியல்

இதனால் ஆதிதிராவிட காலனியைச்சேர்ந்த கிராம மக்கள் அளவையிட வந்த அதிகாரி அளக்காமல் திரும்பிச் சென்றதால் புங்கங்குளம் பகுதியில் அரசு பஸ்சை சிறை பிடித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து தாசில்தாரிடம் முறையிடுங்கள் என்று தெரிவித்ததன் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது. இதனால் இப்பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து மாலையில் தாலுகா அலுவலகத்தில் இருதரப்பினருக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது.


Related Tags :
Next Story