சீராக குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்
சீராக குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
அந்தியூர்
வெள்ளித்திருப்பூர் அருகே சீராக குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சாலை மறியல்
வெள்ளித்திருப்பூர் அருகே உள்ள பட்லூர் ஊராட்சிக்குட்பட்ட மொசக்கவுண்டனூர் பகுதியில் சுமார் 60 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்குள்ள மக்களுக்கு ஊராட்சி சார்பில் ஆற்று குடிநீர் குழாய் வழியாக வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்தநிலையில் கடந்த 5 நாட்களாக குடிநீர் வினியோகிக்கப்படவில்லை. இதனால் குடிநீர் இன்றி பொதுமக்கள் சிரமப்பட்டனர்.
இதையடுத்து நேற்று காலை 8 மணி அளவில் வெள்ளித்திருப்பூர் நால்ரோடு பகுதியில் திரண்ட மொசக்கவுண்டனூர் பகுதி மக்கள் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த வழியாக வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பேச்சுவார்த்தை
இதுபற்றி தகவல் கிடைத்ததும் அந்தியூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் போலீசாருடன் சென்று சாலை மறியலில் ஈடுபட்டு இருந்த பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டு இருந்த பொதுமக்கள், 'கடந்த 5 நாட்களாக ஆற்று தண்ணீர் வினியோகிக்க வில்லை. இதனால் பெரும் அவதிப்படுகிறோம்' என்றனர்.
இதையடுத்து போலீசார் சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகத்துக்கு உடனே இந்த பிரச்சினையை கொண்டு சென்று தண்ணீர் வினியோகிக்க நடவடிக்கை எடுக்கிறோம் என்று உறுதி அளித்தனர். அதை ஏற்றுக்கொண்டு பொதுமக்கள் சாலை மறியலை ைகவிட்டு கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் அந்த பகுதியில் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.