செல்போன் மூலம் எச்சரிக்கும் புதிய திட்டத்திற்கு பொதுமக்கள் வரவேற்பு


செல்போன் மூலம் எச்சரிக்கும் புதிய திட்டத்திற்கு பொதுமக்கள் வரவேற்பு
x

சுனாமி, மழை, வெள்ளம், பூகம்பம் போன்ற பேரிடர், அவசர நிலை குறித்து செல்போன் மூலம் எச்சரிக்கும் புதிய திட்டத்திற்கு புதுக்கோட்டை மக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

புதுக்கோட்டை

சோதனை ஓட்டம்

சுனாமி, மழை, வெள்ளம், பூகம்பம் போன்ற கடுமையான வானிலை எச்சரிக்கைகள், பொது பாதுகாப்பு செய்திகள், வெளியேற்ற அறிவிப்புகள் மற்றும் பிற அவசரகால எச்சரிக்கைகளை வழங்க ''செல் ஒலிபரப்பு எச்சரிக்கை'' சோதனை ஓட்டம் நேற்று நடைபெற்றது. அதன்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் மாதிரி சோதனை பேரிடர் கால எச்சரிக்கை செய்தி நேற்று மதியம் முதல் செல்போன்களுக்கு அனுப்பப்பட்டது. செல்போன்களுக்கு அதிர்வு சத்தத்துடன் இந்த எச்சரிக்கை தகவல் அவ்வப்போது வந்தது. ஏற்கனவே இந்த பேரிடர் கால எச்சரிக்கை தொடர்பாக பொதுமக்கள் யாரும் பதற்றமடைய வேண்டாம் என்று மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்ததால் பொதுமக்களில் பெரும்பாலானோர் பதற்றமடையவில்லை.

கிராமப்புறங்களில் தான் பொதுமக்களில் சிலா் தங்களது செல்போன்களுக்கு இந்த எச்சரிக்கை செய்தி அதிர்வு ஒலியுடன் வந்ததை கண்டு பதற்றம் அடைந்தனர். செல்போன் வெடித்து விடுவோம் என்று கூட அவர்கள் அச்சமடைந்தனர். அவர்களுக்கு இது குறித்து தெரிந்தவர்கள் கூறி புரிய வைத்தனர். இந்த திட்டத்திற்கு புதுக்கோட்டை மாவட்ட மக்கள் வரவேற்பு தெரிவித்தனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-

மீனவர்களுக்கு வரப்பிரசாதம்

அரிமளம் ஒன்றியம் கீரணிப்பட்டி கிராமத்தை சேர்ந்த மனோகரன்:- பேரிடர் மேலாண்மை ஆணையம் மற்றும் தொலை தொடர்பு துறை மூலம் சுனாமி, மழை, வெள்ளம், பூகம்பம் போன்ற கடுமையான சூழ்நிலைகளில் செல்போன் மூலம் தகவல் தெரிவிக்கும் திட்டம் மிக சிறப்பான திட்டம். இந்த திட்டத்தை முழுமையாக வரவேற்கிறேன். தற்போது அனைத்து மக்களிடமும் ஆண்ட்ராய்டு செல்போன் உள்ளது. இந்தநிலையில் செல்போன் மூலம் எச்சரிக்கை விடுப்பதால் பொதுமக்கள் சுதாகரித்துக் கொண்டு தங்கள் வீடுகளுக்கும், பாதுகாப்பான இடங்களை தேடி செல்வதற்கு இது வாய்ப்பாக அமையும். காலநிலை மாற்றத்தால் திடீரென ஏற்படக்கூடிய மழை, வெள்ளம், சுனாமி, புயல் போன்ற பல்வேறு ஆபத்துகளில் இருந்து மனித உயிர்களை காப்பாற்ற முடியும். அதேபோன்று கால்நடைகளும் பாதுகாக்கப்பட வாய்ப்பு உள்ளது. குறிப்பாக மீனவர்களுக்கு இது மிகப்பெரிய வரப்பிரசாதமாக அமையும்.

குறுஞ்செய்தி

விராலிமலையை சேர்ந்த மணிகண்டன்:- நான் சொந்த வேலை காரணமாக மோட்டார் சைக்கிளில் வெளியூருக்கு சென்றபோது திடீரென வித்தியாசமான சப்தத்துடன் எனது செல்போனில் அழைப்பு வந்தது. இதனால் பதற்றமடைந்தேன். அதன் பிறகு சிறிது நேரம் கழித்து வந்த செய்தியை படித்தபோது அது இந்திய அரசின் தொலைதொடர்பு துறை தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்துடன் இணைந்து எமர்ஜென்சி சூழல் குறித்து பொதுமக்களின் விழிப்புணர்வுக்கான அனுப்பியது என அறிந்துகொண்டேன். மேலும் இதுகுறித்த குறுஞ்செய்தி ஏற்கனவே வந்தது நினைவிற்கு வந்தது. இந்த விழிப்புனர்வு சோதனையானது பேரிடர் காலங்களில் கண்டிப்பாக அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

வரவேற்கத்தக்கது

வயலோகம் பகுதியை சேர்ந்த நசீர்அலி:- அதிநவீன தொழில் நுட்பம் மூலம் பேரிடர் அவசர நிலை குறித்து எச்சரிக்கும் புதிய திட்டம் நடைமுறை படுத்தப்படுவதாக கடந்த சில நாட்களாக குறுஞ்செய்தி வந்தது. இந்தநிலையில் இன்று காலை நீண்ட ஒளியுடன் செல்போனில் சத்தம் வந்தது. இயற்கை இடர்பாடு குறித்து இதுபோன்ற தகவல்களை ஒரே நேரத்தில் சென்றடைய கூடிய இந்த திட்டம் வரவேற்கத்தக்கது.

அச்சமடைய தேவையில்லை

புதுக்கோட்டை மாவட்ட பேரிடர் மேலாண்மை பிரிவு தனி தாசில்தார் சக்திவேல்:- பேரிடர் காலங்களில் பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை செய்தியை குறுஞ்செய்தி மூலமாக செல்போனில் அனுப்புவதின் ஒத்திகையாக தான் இன்றைய தினம் (நேற்று) நடைபெற்றது. இந்த குறுஞ்செய்தி ஒரே நேரத்தில் அனைத்து செல்போன்களுக்கும் சென்றடைகிறதா? என சோதனையிடப்பட்டது. ஒவ்வொரு செல்போன் நிறுவனத்தை சேர்ந்த செல்போன் எண்களுக்கு குறிப்பிட்ட நேரத்தில் குறுஞ்செய்தி வந்தது. இந்த சோதனையால் பொதுமக்கள் அச்சமடைய தேவையில்லை. மழை, புயல் போன்ற பேரிடர் காலங்களில் முன்னெச்சரிக்கை செய்தியை கூட இது போன்று அனுப்பலாம். பொதுமக்களும் இதுபோன்ற எச்சரிக்கை குறுஞ்செய்தி வரும் போது தெரிந்து உஷாராக இருக்க முடியும். அதற்கேற்ப செயல்பட முடியும். பேரிடர் காலங்களில் முக்கிய தகவல்களை கூட அறிந்து கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story