ஊர்வலமாக சென்ற விவசாயிகளை போலீசார் தடுத்ததால் தள்ளுமுள்ளு-வாக்குவாதம்
செய்யாறு சிப்காட் விரிவாக்கத்துக்கு விவசாய நிலங்களை தர மாட்டோம் என கூறி விவசாயிகள் ஊர்வலமாக சென்றதை போலீசார் தடுத்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
செய்யாறு சிப்காட் விரிவாக்கத்துக்கு விவசாய நிலங்களை தர மாட்டோம் என கூறி டிராக்டரில் அணிவகுத்து சென்ற விவசாயிகள் ஊர்வலமாக சென்றதை போலீசார் தடுத்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பேச்சுவார்த்தை நடத்த வந்த அதிகாரியிடம் விவசாயிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
சிப்காட் விரிவாக்கம்
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு மாங்கால் கூட்ரோடு பகுதியில் பெரிய அளவிலான தொழிற்சாலைகள் செயல்படும் சிப்காட் தொழிற்பேட்டை அமைந்துள்ளது. இந்த தொழிற்பேட்டையை விரிவாக்கம் செய்ய அருகில் அமைந்துள்ள கிராமங்களான அத்தி, இளநீர்குன்றம், நர்மா பள்ளம், மேல்மா, தேத்துறை, குரும்பூர், வீரம்பாக்கம், வட ஆளப்பிறந்தான், நெடுங்கல் ஆகிய 9 ஊர்களில் சுமார் 3 ஆயிரத்து 174 ஏக்கர் நிலம் கையகப்படுத்துவதற்கான முன்னேற்பாடுகள் சிப்காட் விரிவாக்க மாவட்ட வருவாய் அலுவலகத்தின் மூலம் நடந்தன.
இதனையொட்டி கையகப்படுத்தப்படும் நிலத்தினை உரிமையாளர் பெயருடன் அறிவிப்பு வெளியிட்டு ஆட்சேபனை ஏதும் இருப்பின் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
கையகப்படுத்த எதிர்ப்பு
இந்த நிலையில் விவசாய நிலத்தை கையகப்படுத்தக் கூடாது என வலியுறுத்தி சிப்காட் விரிவாக்க மாவட்ட வருவாய் அலுவலகத்தை நோக்கி ஆட்சேபனை மனு அளிப்பதற்காக டிராக்டர்களில் விவசாயிகள் அணிவகுத்து சென்றனர்.
அங்கு கூடுதல் மாவட்ட சூப்பிரண்டு பழனி தலைமையில் 6 துணை சூப்பிரண்டுகள், 11 இன்ஸ்பெக்டர்கள், 48 சப்-இன்ஸ்பெக்டர்கள் உட்பட 274 போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பில் ஈடுபட்டனர்.
செய்யாறு கூட்டுறவு சர்க்கரை ஆலை அருகே டிராக்டர்களை போலீசார் தடுத்தனர். விவசாயிகளிடம் ஒன்றன்பின் ஒன்றாக சற்று நேர இடைவெளி விட்டு டிராக்டர்கள் செல்லுமாறு போலீசார் அறிவுறுத்தினர். அதற்கு மறுப்பு தெரிவித்த விவசாயிகள் வரிசையாக அணிவகுத்து செல்வோம் என போலீசாரிடம் வாக்குவாதம் செய்தனர்.
அதற்கு போலீசார் மறுப்பு தெரிவித்ததால் டிராக்டரில் இருந்து இறங்கிய விவசாயிகள் செய்யாறு கூட்டுறவு சர்க்கரை ஆலையில் இருந்து சுமார் 6 கிலோமீட்டர் ஊர்வலமாக நடந்தே சென்றனர்.
தடுத்தனர்
திடீரென மாற்றுப்பாதையில் உதவி கலெக்டர் அலுவலகத்தை நோக்கி செல்ல முயன்ற அவர்களை போலீசார் பேரிகார்டுகளை வைத்து தடுத்தனர். அப்போது போலீசாருக்கும் விவசாயிகளுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
அந்த நேரத்தில் பெண்கள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் போலீசாரின் சமாதானத்தை ஏற்ற விவசாயிகள் சிப்காட் விரிவாக்க மாவட்ட வருவாய் அலுவலகத்திற்கு சென்றனர்.
பேரிகார்டுகள் அமைக்கப்பட்டு அலுவலகத்திற்குள் செல்ல முடியாத வகையில் போலீஸ் பாதுகாப்பு வளையம் போடப்பட்டிருந்தது. இதனை பார்த்த விவசாயிகள் மீண்டும் ஆவேசம் அடைந்து கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தர்ணா செய்தனர்.
அவர்களிடம் சிப்காட் விரிவாக்க மாவட்ட வருவாய் அலுவலர் லியாகத், பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது
''எங்களுடைய வாழ்வாதாரத்தை பறிக்கும் தொழிற்சாலைகள் எங்களுக்கு தேவையில்லை எனவும், கார்ப்பரேட் நிறுவன வளர்ச்சிக்காக எங்களுடைய வாழ்வாதாரமான விவசாயத்தை அழித்திட வேண்டாம்'' எனவும் பெண்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அப்பகுதிக்கு வந்த செய்யாறு உதவி கலெக்டர் அனாமிகாவிடம், விவசாய நிலத்தை கையகப்படுத்தக் கூடாது என பெண்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 200 பெண்கள் உட்பட 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்களுடைய இருபது அம்ச கோரிக்கைகளுக்கு பதில் அளிக்க வேண்டும் எனவும், அதுவரை நிலம் எடுப்பு தொடர்பாக பணிகளை மேற்கொள்ளக் கூடாது எனவும் தெரிவித்து மனு அளித்தனர். இச்சம்பவத்தால் சிப்காட் விரிவாக்க மாவட்ட வருவாய் அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.