ராகுல் காந்தியின் நடைபயணம் மக்கள் மத்தியில் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாது - மத்திய இணை மந்திரி எல்.முருகன்


ராகுல் காந்தியின் நடைபயணம் மக்கள் மத்தியில் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாது - மத்திய இணை மந்திரி எல்.முருகன்
x
தினத்தந்தி 3 Sep 2022 11:21 AM GMT (Updated: 3 Sep 2022 11:22 AM GMT)

ராகுல்காந்தியின் நடைபயணம் மக்கள் மத்தியில் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்று மத்திய இணை மந்திரி எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

திருப்பூர்,

மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை, மீன்வளம், கால்நடை மற்றும் பால்வளத்துறை இணை மத்திரி எல்.முருகன் இன்று திருப்பூரில் கட்சி நிகழ்ச்சிகள் மற்றும் தொழில்துறையினர் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின்போது கூறியதாவது:-

தமிழக முதல்-அமைச்சர் அனைவருக்கும் பொதுவானவர். தி.மு.க. தலைவராக இருந்தாலும், முதல்-அமைச்சர் என்ற முறையில் அனைத்து தரப்பு மக்களையும் ஒன்றாக பார்க்க வேண்டும். மற்ற மத பண்டிகைக்கு சென்று கொண்டாடுவதை வழக்கமாக கொண்டு இருக்கிறார். வாழ்த்துக்களை பரிமாறியுள்ளார்.

ஆனால் தீபாவளி, விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு முதல்-அமைச்சர் வாழ்த்து சொல்லாமல் இருப்பதை தமிழக மக்கள் கேள்வி கேட்கிறார்கள். தேர்தல் நேரத்தில் மட்டும் மு.க.ஸ்டாலின் வேல் ஏந்தி வந்தார். வாக்குகளுக்காக அதை செய்து விட்டு விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு அவர் வாழ்த்து சொல்லாதது மக்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்திருக்கிறது. தேர்தல் வாக்குறுதிகளை தி.மு.க. அரசு நிறைவேற்ற வேண்டும்.

திருப்பூர் பழைய பஸ் நிலையத்துக்கு கொடிகாத்த திருப்பூர் குமரனின் பெயரை வைக்க வேண்டும் என்பது மக்களின் கருத்தாக உள்ளது. காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை இந்தியாவில் யாரும் ஒரு பொருட்டாக எடுத்துக்கொண்டதாக தெரியவில்லை.

ராகுல்காந்தி நடைபயணம், பிரசார பயணம் எந்தவித பிரயோஜனத்தை ஏற்படுத்தப்போவதில்லை. எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தப்போவதில்லை. மக்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தாது.

சட்டம், ஒழுங்கை பராமரிக்கும் பொறுப்பு மாநில அரசுக்கு உள்ளது. காவல்துறை மாநில அரசின் கையில் உள்ளது. தமிழகத்தில் கஞ்சா விற்பனை பரந்து விரிந்துள்ளது.

கஞ்சா போன்ற போதைப்பொருட்களை தடுப்பதற்கு தொடர் நடவடிக்கை எடுக்க வேண்டும். கவர்னர்கள் இந்திய அரசியலமைப்பு சட்டப்படி மாநில அரசுக்கு தேவையான ஆலோசனைகளை வழங்கி வருகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story