சென்னையில் மழை - தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்த 8 விமானங்கள்..!
சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
சென்னை,
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்றிரவு பரவலாக மழை பெய்து வருகிறது. அண்ணாநகர் நுங்கம்பாக்கம், கே.கே. நகர், கிண்டி, திருவான்மியூர், ஆலந்தூர், ஆதம்பாக்கம், ஈக்காட்டுத்தாங்கல், மடிப்பாக்கம், வேளச்சேரி, அசோக் நகர், மாம்பலம், ஆழ்வார்பேட்டை, நந்தனம், தியாகராய நகர் உள்ளிட்ட பகுதிகளில் பகுதிகளில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்தது. இதேபோல புறநகர் பகுதிகளான குரோம்பேட்டை, பெருங்களத்தூர், வண்டலூர், தாம்பரம், பல்லாவரம் பகுதிகளிலும் மிதமான மழை பெய்தது.
இந்த நிலையில், சென்னையில் இடி, மின்னல், சூறைக்காற்றுடன் பெய்த மழையால் சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. 8 விமானங்கள் தரையிறங்க முடியாமல், வானில் வட்டமடித்து பறந்தன.
லண்டன், மலேசியா, சிங்கப்பூர், திருச்சியில் இருந்த விமானங்களும், தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்து, பின்னர் தரையிறங்கின. சென்னையில் இருந்து செல்ல வேண்டிய 12 விமானங்கள் 30 நிமிடம் முதல் 3 மணி நேரம் வரை தாமதமாக புறப்பட்டு சென்றன. விமானங்கள் தாமதமானதால் பயணிகள் கடும் அவதியடைந்துள்ளனர்.