மழைக்கு வாய்ப்பு உள்ளது...! "குட் நியூஸ்" சொன்ன வெதர்மேன் பிரதீப் ஜான்!


மழைக்கு வாய்ப்பு உள்ளது...! குட் நியூஸ் சொன்ன வெதர்மேன் பிரதீப் ஜான்!
x
தினத்தந்தி 17 March 2023 5:17 AM GMT (Updated: 17 March 2023 5:29 AM GMT)

"குட் நியூஸ்" சொன்ன வெதர்மேன் பிரதீப் ஜான்! மழைக்கு வாய்ப்பு உள்ளது...!

சென்னை

கோடைகாலத்தின் முதல் மாதமாக கருதப்படும் மார்ச் மாதத்தின் தொடக்கத்திலேயே 100 டிகிரிக்கும் அதிகமாக வெயில் மக்களை வாட்டி வதைத்து வருவதால் தமிழ்நாடு மக்கள் அவதிக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.

குறிப்பாக ஈரோடு, சேலம், நாமக்கல் ஆகிய உள் மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக 100 டிகிரிக்கும் அதிகமாக வெயில் பதிவாகி உள்ளது. இதேபோல் தமிழ்நாட்டின் மற்ற மாவட்டங்களிலும் வெப்ப அலை வீசத் தொடங்கி உள்ளது.

எனவே மதியம் 12 முதல் 3 மணி வரை மக்கள் வெளியில் செல்ல வேண்டாம் என அரசு அறிவுறுத்தி உள்ளது. இந்த நிலையில் வெயிலின் தாக்கத்தில் இருந்து சற்று விடுபட மழையை எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள் மக்கள்.

இன்று சென்னையில் வள்ளுவர் கோட்டம், கோடம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது

தமிழ்நாடு வட உள் பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, 17.03.2023 முதல் 19.03.2023 வரை, தமிழக பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீன் ஜான் கூறி இருப்பதாவது:-

இந்த ஆண்டு நம் தமிழ்நாட்டை பொறுத்தவரை பிப்ரவரியாக இருந்தாலும், மார்ச்சாக இருந்தாலும் சராசரியை ஒட்டியே இருப்பதை பார்க்கிறோம். சில நாட்களில் உள்மாவட்டங்களில், குறிப்பாக மேற்கு உள்மாவட்டங்களான திருப்பூர், கோயம்புத்தூர், ஈரோடு, சேலத்தில் கிழக்கில் இருந்து காற்று வீசிக்கொண்டு இருக்கிறது.

எனவே அவர்களுக்கு இந்த காற்று உள்ளே செல்ல செல்ல தரைக்காற்றாக மாறிவிடும். எனவே மேற்குப்பகுதியில் தரைக்காற்று கடைசியாக செல்லும்போது அதிகமான வெப்ப நிலையை பார்ப்போம்.

அடுத்த 2 அல்லது 3 வாரங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. இது வழக்கமாகவே பிப்ரவரி இறுதியில் இருந்தே இதை நாம் பார்த்து உள்ளோம். வரும் நாட்களில் மேகமூட்டம் அதிகரிக்க போகிறது. மழை வர இருக்கிறது. நேற்று அல்லது இன்றோடு அதை கடைசியாக பார்த்துள்ளோம்.

இனி வரக்கூடிய நாட்களில் மூடுபனி இருக்காது. அதே நேரத்தில் மழையின் தாக்கம் அடுத்த 15 நாட்களில் இருக்கும். கடலோர மாவட்டங்களில் 4 அல்லது 5 நாட்கள் மழை பெய்யலாம். உள் மாவட்டங்களில் கிட்டத்தட்ட 10 அல்லது 15 நாட்கள் ஆங்காங்கே இடி மின்னலுடன் மழை பெய்யலாம். இதை பரவலாக பெய்யும் மழை என்று சொல்ல முடியாது. ஆங்காங்கே பெய்யும்." என்று தெரிவித்து உள்ளார்.


Next Story