ஊஞ்சலூர் அருகே பலத்த காற்றுடன் மழை: அறுந்து விழுந்த மின்கம்பியை மிதித்த மூதாட்டி மின்சாரம் தாக்கிபலி
ஊஞ்சலூர் அருகே பலத்த காற்றுடன் மழை பெய்ததில் அறுந்து விழுந்த மின்கம்பியை மிதித்த மூதாட்டி மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார். 2 எருமை மாடுகளும் செத்தன.
ஊஞ்சலூர்
ஊஞ்சலூர் அருகே பலத்த காற்றுடன் மழை பெய்ததில் அறுந்து விழுந்த மின்கம்பியை மிதித்த மூதாட்டி மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார். 2 எருமை மாடுகளும் செத்தன.
மூதாட்டி சாவு
ஈரோடு மாவட்டம் ஊஞ்சலூர் அருகே உள்ள மேல்மலையம்பாளையத்தை சேர்ந்தவர் பெரியசாமி கவுண்டர். இவர் சில ஆண்டுகள் முன்பு இறந்துவிட்டார். அவருடைய மனைவி நல்லம்மாள் (வயது 82). இவர் எருமை மாடுகளை வைத்து வளர்த்து வந்தார். இவற்றை நேற்று காலையில் வழக்கம்போல நல்லம்மாள் மேய்ச்சலுக்கு விட்டு இருந்தார். இதனிடையே ஊஞ்சலூர் மற்றும் அதன் சுற்றுப்புறப்பகுதிகளில் நேற்று மாலை பலத்த காற்றுடன் மழை பெய்தது. அப்போது நல்லம்மாள் வீட்டுக்கு மாடுகளை அழைத்து வந்து கொண்டிருந்தார்.
குட்டைக்காடு என்ற இடத்தில் வந்த போது அங்கு பலத்த காற்றுடன் மழை பெய்ததில் மின்கம்பி அறுந்து விழுந்து கிடந்தது. இதனை நல்லம்மாள் கவனிக்காமல் மிதித்துவிட்டார். இதில் மின்சாரம் தாக்கி அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
எருமை மாடுகளும் செத்தன
அதேபோல் மின்கம்பியை மிதித்ததில் 2 எருமை மாடுகளும் மின்சாரம் தாக்கி செத்தன. இதுகுறித்து தகவல் கிடைத்ததும் மலையம்பாளையம் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மன்சூர் அலி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று நல்லம்மாளின் உடலை பார்வையிட்டு் விசாரணை நடத்தினர். பின்னர் உடலை பிரேத பரிசோதனைக்காக கொடுமுடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையே குட்டைக்காடு பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு அறுந்து கிடந்த மின்கம்பியை சரிசெய்யும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டனர்.
அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த மூதாட்டி மின்சாரம் தாக்கி இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.