பிரதான சாலைகள் மட்டுமின்றி உட்புற சாலைகளிலும் மழைநீர் தேங்கியுள்ளது - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றச்சாட்டு


பிரதான சாலைகள் மட்டுமின்றி உட்புற சாலைகளிலும் மழைநீர் தேங்கியுள்ளது - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றச்சாட்டு
x

புயல் குறித்து முன்னெச்சரிக்கை செய்து மக்களை தயார்படுத்த அரசு தவறிவிட்டதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.

சென்னை,

மிக்ஜம் புயல் காரணமாக சென்னையில் கனமழை பெய்தது. இதனால் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கியது. மேலும் சில இடங்களில் குடியிருப்பு பகுதிகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் புயல் குறித்து முன்னெச்சரிக்கை செய்து மக்களை தயார்படுத்த அரசு தவறிவிட்டதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது;-

"புயலின் தாக்கத்தால் கனமழை பெய்யக்கூடும் என்பதால் மக்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என அரசு முன்னரே சொல்லியிருந்தால் மக்கள் தயார் நிலையில் இருந்திருப்பார்கள். கடந்த 2015-ம் ஆண்டு ஒரு மாதத்தில் பெய்த மழையை விட தற்போது 50 சதவீதம்தான் மழை பெய்துள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

மக்களுக்கு பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. பாதுகாப்பு கருதி மின்சாரத்தை துண்டித்தாலும், அது குறித்து முன்னரே அறிவித்திருக்க வேண்டும். பிரதான சாலைகள் மட்டுமின்றி உட்புற சாலைகளிலும் மழைநீர் தேங்கியுள்ளது. பல இடங்களில் தேங்கி நிற்கும் மழைநீருடன் கழிவுநீரும் கலந்துள்ளது."

இவ்வாறு ஜெயக்குமார் கூறினார்.


Next Story