தொடர் மழையால் தேங்கிய மழைநீர் வடிந்து வருகிறது - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்


தொடர் மழையால் தேங்கிய மழைநீர் வடிந்து வருகிறது - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
x

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மீட்பு குழுவினரை சந்தித்து, மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்பு நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.

சென்னை,

சென்னையில் நேற்று முதல் தொடர்ந்து மழை பெய்துவருகிறது. தொடர் மழை காரணமாக சாலைகளில் மழை நீர் தேங்கியுள்ளதால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர். சாலைகளில் தேங்கிய மழை நீரை அகற்றும் பணியில் மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று சென்னை, ரிப்பன் மாளிகை, பெருநகர சென்னை மாநகராட்சி அலுவலகத்தில், கனமழையையொட்டி மீட்புப் பணிக்காக தயார் நிலையில் உள்ள தமிழ்நாடு பேரிடர் மீட்பு குழுவினரை சந்தித்து, மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்பு நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்து, மீட்பு உபகரணங்களையும் பார்வையிட்டார்.

இந்த நிலையில் தொடர் மழை காரணமாகத் தேங்கிய மழைநீர் விரைந்து வடிந்து வருவதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேல், விடாமல் மழை கொட்டித் தீர்த்தாலும், பல இடங்களில் மழைநீர் தேங்காமல் இருந்தது. தொடர் மழை காரணமாகத் தற்போது சில இடங்களில் தேங்கிய மழைநீரும் விரைந்து வடிந்து கொண்டிருக்கிறது.

விரைவாகச் செயல்பட்டு, தேங்கிய நீரை வெளியேற்ற அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். மழை தொடர்பான புகார்களுக்குச் சென்னை மக்கள் 1913, 04425619204, 04425619206, 04425619207 ஆகிய எண்களிலும், 9445477205 எண் மூலம் வாட்ஸ்அப் வழியாகவும் உதவிகளைப் பெறலாம்" என்று தெரிவித்து உள்ளார்.


Next Story