ரேஷன் கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
கள்ளக்குறிச்சியில் ரேஷன் கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளர் சங்கம் சார்பில் நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் மாயவன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பெருமாள், மாவட்ட பொருளாளர் தனராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பட்டியல் இன பணியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும்.பெண் பணியாளர்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுப்பதை தடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில் பணியாற்றி வரும் பணியாளர்கள் அனைவரும் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் செய்து இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட இணை செயலாளர்கள் ஏழுமலை, அமலா, மாவட்ட துணைத்தலைவர்கள் பரசுராமன், வேல்முருகன், உளுந்தூர்பேட்டை வட்ட தலைவர் ராஜகோபால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.