தென்மேற்கு பருவமழையை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும்


தென்மேற்கு பருவமழையை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும்
x
தினத்தந்தி 6 July 2023 3:35 AM IST (Updated: 6 July 2023 5:22 PM IST)
t-max-icont-min-icon

தென்மேற்கு பருவமழையை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என அரசு அலுவலர்களுக்கு கலெக்டர் தீபக் ஜேக்கப் அறிவுறுத்தினார்.

தஞ்சாவூர்

தஞ்சாவூர்;

தென்மேற்கு பருவமழையை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என அரசு அலுவலர்களுக்கு கலெக்டர் தீபக் ஜேக்கப் அறிவுறுத்தினார்.

ஒருங்கிணைப்புக்குழு கூட்டம்

தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட பேரிடர் மேலாண்மை சார்பில் தென்மேற்கு பருவமழை குறித்து முன்னெச்சரிகை நடவடிக்கை தொடர்பான ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நேற்று நடந்தது. இதற்கு கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை இந்த மாதம் இறுதியில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ள தமிழகஅரசு அறிவித்துள்ளது. கலெக்டர் அலுவலகம், வருவாய் கோட்ட அலுவலகங்கள், தாசில்தார் அலுவலகங்கள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் 24 மணிநேர கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு, அனைத்து தகவல் தொடர்பு சாதனங்களுடன் சுழற்சி முறையில் பணியாளர்கள் கண்காணிக்க வேண்டும். வருவாய்த்துறையினர் தலைமையில் மண்டல அளவிலான குழுக்கள் நியமித்து ஒவ்வொரு குழுவும் 5 அல்லது 7 பாதிக்கப்பட்ட பகுதிகளை கண்காணிக்க வேண்டும்.

தயார் நிலை

பொதுப்பணித்துறை, ஊரக வளர்ச்சித்துறை, மாநகராட்சி நிர்வாகம், பேரூராட்சிகள், மருத்துவத்துறை, பொது சுகாதாரத்துறை, வருவாய்த்துறை, தீயணைப்புத்துறை, நெடுஞ்சாலைத்துறை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம், மின்சார வாரியம் உள்ளிட்ட அனைத்துத்துறை அலுவலர்களும் பேரிடர் காலங்களில் ஏற்படும் பாதிப்புகளை எல்லா வகையிலும் சமாளிக்க வேண்டும். நிவாரண பணிகளில் எந்தவித தொய்வும் ஏற்படாத வகையில், உயிர்சேதம் ஏற்படாத வகையிலும் தேவையான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தென்மேற்கு பருவமழையை எதிர்கொள்ள அனைத்துத்துறை அலுவலர்களும் தயார் நிலையில் இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் (வருவாய்) சுகபுத்ரா, கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) ஸ்ரீகாந்த், நீர்வளத்துறை அலுவலர்கள், அனைத்து வருவாய் கோட்டாட்சியர்கள், தாசில்தார்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story