ஆக்கிரமிப்பில் இருந்த ரூ.4 கோடி மதிப்பிலான இடம் மீட்பு


ஆக்கிரமிப்பில் இருந்த ரூ.4 கோடி மதிப்பிலான இடம் மீட்பு
x
தினத்தந்தி 12 July 2023 10:57 PM IST (Updated: 13 July 2023 1:09 PM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலையில் ஆக்கிரமிப்பில் இருந்த ரூ.4 கோடி மதிப்பிலான இடத்தை அதிகாரிகள் மீட்டனர்.

திருவண்ணாமலை

ஆக்கிரமிப்பு

திருவண்ணாமலை நகராட்சிக்கு உட்பட்ட கீழ்நாத்தூர் பகுதியில் கடந்த 2010-ம் ஆண்டு மாவட்ட நிர்வாகம் 90 சென்ட் நிலத்தை அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டுவதற்கு குடிசை மாற்று வாரியத்திற்கு ஒப்படைத்தது. இந்த இடத்தை சிலர் கடந்த 10 வருடங்களாக ஆக்கிரமிப்பு செய்து வீடு, கடை, உணவகம் உள்ளிட்ட பல்வேறு கட்டிடங்களை கட்டி வாடகைக்கு விட்டிருந்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து கடந்த சில நாட்களுக்கு முன்பு மாவட்ட கலெக்டர் முருகேஷ்க்கு புகார்கள் வந்தது.அதைத்தொடர்ந்து அவர் அந்த இடத்தை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். இதையடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்ற அவர் உத்தரவிட்டார்.

மீட்பு

அதன்பேரில் நேற்று தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார மேம்பாட்டு வாரியத்தின் நிர்வாக பொறியாளர் குமாரதுரை தலைமையில் வருவாய்த்துறை, மின்சாரத்துறை, திருவண்ணாமலை கிழக்கு போலீசார் ஆகியோர் சென்று அங்கு கட்டப்பட்டு இருந்த கடைகளை பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அப்புறப்படுத்தினர்.

மீட்கப்பட்ட இந்த இடத்தின் மதிப்பு சுமார் ரூ.4 கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது. தனி நபர்களிடமிருந்து மீட்கப்பட்ட இந்த இடத்தில் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டி தகுதியானவர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story