திருட்டுபோன ரூ.10 லட்சம் டயர்கள் மீட்பு; ஒருவர் கைது
திருட்டுபோன ரூ.10 லட்சம் டயர்கள் மீட்கப்பட்டு, ஒருவர் கைது செய்யப்பட்டார்.
மணிகண்டம்:
டயர்கள் திருட்டு
திருச்சி மாவட்டம், மணிகண்டம் அருகே உள்ள அளுந்தூரில் ஒரு சரக்கு வாகன விற்பனை நிலையம் உள்ளது. கடந்த ஜனவரி மாதம் இந்த விற்பனை நிலைய வளாகத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.6 லட்சம் மதிப்பிலான புதிய டயர்கள் திருட்டு போயின. அதேபோல் அப்பகுதியில் உள்ள மற்றொரு நிறுவன வளாகத்தில் லாரியில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.4 லட்சம் மதிப்பிலான டயர்கள் திருட்டு போயின.
இது குறித்த புகார்களின் பேரில் மணிகண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து, விசாரணை மேற்கொண்டனர். மேலும் திருவெறும்பூர் போலீஸ் துணை சூப்பிரண்டு அறிவழகன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் கமலேஸ்வரி தலைமையில் குற்றப்பிரிவு போலீசார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடி வந்தனர்.
கைது
இந்நிலையில் அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவில், மர்ம நபர்கள் டயர்களை திருடி லாரியில் ஏற்றிச்செல்லும் காட்சி பதிவாகி இருந்தது. இதையடுத்து அந்த லாரியின் பதிவு எண்ணை கொண்டு போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். மேலும் இது தொடர்பாக திருப்பத்தூர் மாவட்டம், ஆலங்காயம் அருகே உள்ள கல்லறைப்பட்டி கிராமத்தை சேர்ந்த கோவிந்தன் (வயது 48) என்பவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், அவர், தனது நண்பர்கள் 3 பேர் உதவியுடன் அளுந்தூரில் ரூ.10 லட்சம் மதிப்பிலான டயர்களை திருடிச்சென்றது தெரியவந்தது. இதையடுத்து கோவிந்தனை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து ரூ.10 லட்சம் மதிப்பிலான லாரி டயர்களை மீட்டனர். மேலும் டயர்களை கடத்திச் செல்ல பயன்படுத்திய லாரியை பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை திருச்சி ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு எண்-4 கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள ஏலகிரி மலை பகுதியை சேர்ந்த முருகன், முத்துக்குமார், செல்வராஜ் ஆகிய 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.