விழுப்புரம் புதிய பஸ் நிலையம் எதிரே சாலையோர ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்
விழுப்புரம் புதிய பஸ் நிலையம் எதிரே சாலையோர ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டன.
விழுப்புரம் புதிய பஸ் நிலையம் எதிரே உள்ள பயணியர் நிழற்குடையின் அருகில் நெடுஞ்சாலையை ஆக்கிரமித்து சிலர் டீக்கடைகள், சிற்றுண்டி கடைகள் வைத்திருந்தனர். இந்த சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளால் போக்குவரத்துக்கு பெரும் இடையூறு ஏற்பட்டது. இதனால் இங்குள்ள பஸ் நிறுத்தத்தில் காத்திருக்கும் பயணிகள் மிகவும் அவதியடைந்தனர். இந்த ஆக்கிரமிப்புகளை கடந்த 3 மாதங்களுக்கு முன்பு அகற்றப்பட்ட நிலையில் தொடர்ந்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கண்காணிக்காததால் மீண்டும் ஆக்கிரமிப்புகள் உருவாகின. எனவே இந்த சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டுமென பொதுமக்கள் மத்தியில் கோரிக்கை எழுந்ததோடு மீண்டும் ஆக்கிரமிப்புகள் உருவாகாமல் இருக்க அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டுமென வலியுறுத்தினர்.
இந்நிலையில் நேற்று நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மற்றும் போக்குவரத்து போலீசார் அங்கு நேரில் சென்று பொக்லைன் எந்திரம் மூலம் சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றினர். மேலும் இங்கு மீண்டும் ஆக்கிரமிப்பு செய்து கடைகள் அமைத்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரிக்கை செய்தனர்.