விழுப்புரம் புதிய பஸ் நிலையம் எதிரேசாலையோர ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்
விழுப்புரம் புதிய பஸ் நிலையம் எதிரே இருந்த சாலையோர ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டது.
விழுப்புரம் புதிய பஸ் நிலையம் எதிரே உள்ள பயணியர் நிழற்குடையின் அருகில் சாலையோரத்தில் பயணிகள் அமருவதற்காக இருக்கைகள் போடப்பட்டுள்ளன. அந்த நடைபாதையை ஆக்கிரமித்து பழக்கடைகள், சிற்றுண்டிகள், டீக்கடைகள், ஜூஸ் கடைகள் என 10-க்கும் மேற்பட்ட கடைகளை வைத்து வியாபாரம் செய்து வந்தனர். இந்த ஆக்கிரமிப்புகளினால் அந்த நடைபாதையை பயணிகள் பயன்படுத்த முடியாமலும், நடந்து செல்ல வழியில்லாமலும் பாதிப்புக்குள்ளாகினர். மேலும் இந்த ஆக்கிரமிப்புகளினால் அப்பகுதியில் போக்குவரத்துக்கும் பெரும் இடையூறு ஏற்பட்டது. எனவே இந்த ஆக்கிரமிப்பு கடைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து அகற்ற வேண்டுமென பயணிகள் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் நேற்று நெடுஞ்சாலைத்துறை ஆய்வாளர் இளங்கோ தலைமையிலான சாலைப்பணியாளர்கள், பொக்லைன் எந்திரத்தின் உதவியுடன் அந்த ஆக்கிரமிப்பு கடைகளை அதிரடியாக அகற்றினர். இதனால் நடைபாதை விசாலமாக காட்சியளித்தது. எந்தவித இடையூறும் இன்றி வாகன போக்குவரத்தும் சீராக நடைபெற்றது. இதனால் பயணிகள் மிகவும் மகிழ்ச்சியடைந்தனர். ஆக்கிரமிப்பு அகற்றப்படுவதையொட்டி ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க அங்கு போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.