பழனி பஸ் நிலையத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்


பழனி பஸ் நிலையத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
x

பழனி பஸ்நிலையத்தில் நகராட்சி சார்பில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.

திண்டுக்கல்

பழனி பஸ் நிலைய நடைமேடையில் கடைக்காரர்கள் பயணிகளுக்கு இடையூறாக ஆக்கிரமித்து உள்ளதாகவும், அதை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நகராட்சி நிர்வாகத்துக்கு பயணிகள், பக்தர்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்தநிலையில் பழனியில் நகராட்சி சார்பில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடந்தது. ஆணையர் கமலா தலைமையில் நகராட்சி பணியாளர்கள் மற்றும் ஊழியர்கள் பழனி பஸ்நிலையத்தில் ஆக்கிரமிப்பை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். அப்போது நடைமேடைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்த சுவர்கள், இடையூறாக வைத்திருந்த விளம்பர பதாகைகள், பேனர்கள் அனைத்தும் பொக்லைன் எந்திரம் கொண்டு இடித்து அகற்றப்பட்டது. இதற்கிடையே அதிகாரிகளை கண்டதும் கடைக்காரர்கள் சிலர் தாங்களாகவே முன்வந்து ஆக்கிரமிப்பை அகற்றிக்கொண்டனர்.

மேலும் மதுரை பஸ்கள் நிற்கும் நடைமேடை பகுதியில் இருந்த ஆக்கிரமிப்புகளை நகராட்சி பணியாளர்கள் அகற்றியபோது சில கடைக்காரர்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நகராட்சி பணியாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த பழனி டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் உதயகுமார் தலைமையிலான போலீசார் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பயணிகளுக்கு இடையூறாக ஆக்கிரமிப்புகள் இருந்தால் பாரபட்சம் இன்றி அவை அகற்றப்படும் என்று தெரிவித்தனர். இதையடுத்து பயணிகள், பக்தர்களுக்கு இடையூறாக இருந்த அனைத்து ஆக்கிரமிப்புகளும் அகற்றப்பட்டன. இதனால் பழனி பஸ் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதற்கிடையே ஆக்கிரமிப்புகள் அகற்றியதற்கு பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ள நிலையில், இதேபோல் திண்டுக்கல் சாலை, மார்க்கெட் சாலை ஆகிய இடங்களிலும் ஆக்கிரமிப்புகளை விரைவில் அகற்ற வேண்டும் என்றனர்.


Next Story