மாங்காட்டில் 700 மீட்டர் கால்வாயை சீரமைத்தால் மழைக்காலத்தில் தண்ணீர் தேங்காது - அதிகாரிகள் தகவல்


மாங்காட்டில் 700 மீட்டர் கால்வாயை சீரமைத்தால் மழைக்காலத்தில் தண்ணீர் தேங்காது - அதிகாரிகள் தகவல்
x

மாங்காட்டில் 700 மீட்டர் கால்வாயை சீரமைத்தால் மழைக்காலத்தில் தண்ணீர் தேங்காது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

செங்கல்பட்டு

ஆண்டுதோறும் பொழியும் பருவமழையின் காரணமாக மாங்காடு நகராட்சிக்குட்பட்ட ஓம் சக்தி நகர், சக்ரா நகர், மேல் ரகுநாதபுரம், கீழ் ரகுநாதபுரம், சினிவாசா நகர், சாதிக் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை நீரானது குளம் போல் தேங்கி பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளானார்கள்.

மேலும் கடந்த பருவமழையின் போது பூந்தமல்லி நகராட்சி, நசரத்பேட்டை, மலையம்பாக்கம் உள்ளிட்ட 5 ஊராட்சிகளில் இருந்து வந்த தண்ணீரும் தேங்கியதால் மாங்காடு நகராட்சி வெள்ளத்தில் தத்தளித்து வெள்ளக்காடாக காட்சி அளித்தது.

இதன் காரணமாக வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் பூந்தமல்லி நகராட்சி, நசரத்பேட்டை, அகரமேல் உள்ளிட்ட ஊராட்சிகளில் இருந்து வரக்கூடிய மழைநீர் மாங்காடு நகராட்சிக்குள் வராமல் நேரடியாக கல்குவாரிக்கு செல்வதற்காக மழைநீர் கால்வாய் அமைக்கப்பட்டு தற்போது கல்குவாரியும் நிரம்பியது.

இருப்பினும் மாங்காடு நகராட்சிக்குட்பட்ட பகுதியில் தேங்கும் மழை நீரை வெளியேற்ற போதிய வடிகால்வாய்கள் இருந்தாலும் இறுதியாக ஓம் சக்தி நகர் வழியாக வந்து குன்றத்தூர் - குமணன்சாவடி சாலையை கடந்து மழைநீர் செல்ல வேண்டும். தற்போது குன்றத்தூர் - குமணன்சாவடி சாலை உயரமாக அமைக்கப்பட்டு இருப்பதாலும், ஓம் சக்தி நகர் தாழ்வாக இருப்பதாலும் மின் மோட்டார்கள் வைத்து மழை நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:-

தற்போது நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்ட மழைநீர் கால்வாயில் தேங்கியுள்ள மழை நீர் செல்ல போதிய வழி இல்லாததால் மழை நீரானது அதிக அளவில் தேங்குகிறது. 700 மீட்டர் தூரம் கொண்ட மழைநீர் கால்வாயை மீண்டும் சீரமைத்து ஓம் சக்தி நகர் பகுதியில் இருந்து மழை நீர் செல்ல வழிவகை செய்தால் வரும் பருவமழையின் போது மாங்காடு நகராட்சியில் மழைநீர் தேங்காது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story