வீட்டில் பதுக்கி வைத்திருந்த 5 பழங்கால சிலைகள் மீட்பு


வீட்டில் பதுக்கி வைத்திருந்த 5 பழங்கால சிலைகள் மீட்பு
x

நெல்லையில் சினிமா போட்டோகிராபர் வீட்டில் போலீசார் அதிரடி சோதனை நடத்தி 5 பழங்கால சிலைகளை மீட்டுள்ளனர். அவை கடத்தி வரப்பட்ட சிலைகளா? என்பது பற்றி தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருநெல்வேலி

நெல்லை அருகே ராஜவல்லிபுரத்தில் ஒரு வீட்டில் பழங்கால சிலைகள் இருப்பதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டி.ஜி.பி. ஜெயந்த் முரளிக்கு ரகசிய தகவல் கிடைத்தது.‌ இதையடுத்து அவரது உத்தரவுப்படி நெல்லை சரக சிலை திருட்டு தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் இளங்கோ தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் சகாய செல்வின், சிபின் ராஜ்மோன், நாகேந்திரன் மற்றும் போலீசார் நேற்று ராஜவல்லிபுரம் சென்றனர்.

அந்த ஊரை சேர்ந்த செல்லப்பாண்டியன் மகன் நடராஜன் (வயது 30) என்பவரது வீட்டில் கிராம நிர்வாக அலுவலர் சுப்பிரமணியன் முன்னிலையில் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையின்போது அவரது வீட்டில் இருந்து 5 பழங்கால சிலைகள் மீட்கப்பட்டன. 24 சென்டி மீட்டர் உயரம் உள்ள விநாயகர் சிலை, சிறிய விநாயகர் சிலை, சுவரில் மாட்டும் விநாயகர் சிலை, வடமாநிலத்தில் வழிபடக்கூடிய 8 சென்டி மீட்டர் உயரம் கொண்ட தாரா அம்மன் சிலை மற்றும் சிலுவையில் அறையப்பட்ட ஏசுநாதர் சிலை ஆகிய 5 சிலைகள் பதுக்கி வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டது.

இந்த சிலைகள் எங்கிருந்து கொண்டு வரப்பட்டது? என்பது குறித்தும், யாருக்கு விற்பனை செய்வதற்காக பதுக்கி வைக்கப்பட்டது? என்பது குறித்தும் நடராஜன் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளார். அவரிடம் சிலைகளுக்கு உரிய எந்த ஆவணமும் இல்லை, என போலீசார் தெரிவித்தனர். எனவே, இந்த சிலைகளை வடமாநில கோவில்களில் இருந்து திருடி, கடத்தி வந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். சிலை திருட்டு தடுப்பு போலீசார் இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மீட்கப்பட்ட 5 சிலைகளையும் டெல்லியில் உள்ள தொல்லியல் ஆய்வகத்திற்கு அனுப்பி இது எந்த காலத்தை சேர்ந்த சிலைகள், இதன் மதிப்பு என்ன? என்பது குறித்து கண்டறிய போலீசார் முடிவு செய்துள்ளனர். நடராஜன் சினிமாத்துறையில் போட்டோகிராபராக பணியாற்றி வருகிறார். அழகிய கலைப் பொருட்களை விற்பனை செய்யும் தொழிலும் செய்து வருகிறார் என்பது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக சிலை திருட்டு தடுப்பு பிரிவு போலீசார் நடராஜனை பிடித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story