சாலையோரம் நின்ற காரில் 5 பேர் சடலமாக மீட்பு - புதுக்கோட்டை அருகே பரபரப்பு

புதுக்கோட்டை அருகே சாலையோரம் நின்ற காரில் 5 பேர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சாலையோரம் நின்ற காரில் 5 பேர் சடலமாக மீட்பு - புதுக்கோட்டை அருகே பரபரப்பு
Published on

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை-மதுரை தேசிய நெஞ்சாலையில் நமனசமுத்திரம் பகுதி அருகே சாலையோரமாக ஒரு கார் நீண்ட நேரம் நின்று கொண்டிருந்தது. இதனால் சந்தேகமடைந்த அப்பகுதி மக்கள் நமனசமுத்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து போலீசார் அங்கு வந்து சோதனை செய்தபோது, அந்த காரில் 2 பெண்கள் உள்பட மொத்தம் 5 பேர் உயிரற்ற நிலையில் காருக்குள் சடலமாக கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், காரில் உயிரிழந்து கிடந்தது சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மணிகண்டன் மற்றும் அவரது குடும்பத்தினர் என்பது தெரியவந்துள்ளது.

மேலும் ஒரு கடிதத்தை காவல்துறையினர் கைப்பற்றி உள்ளதாகவும், அதில் மணிகண்டனின் தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டதாக எழுதியிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதுபற்றி போலீசார் நடத்திய தொடர் விசாரணையில், தற்கொலை செய்த 5 பேரும் ஒரே குடும்பத்தினர் என தெரிய வந்துள்ளது.

அவர்கள், ஸ்டேட் பாங்க் காலனியை சேர்ந்த மணிகண்டன் (வயது 50), அவருடைய மனைவி நித்யா (வயது 48), தாயார் சரோஜா (வயது 70), மகள் நிகரிகா (வயது 22) மற்றும் மகன் தீரன் (வயது 20) என தெரிய வந்துள்ளது.

சம்பவ இடத்திற்கு தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கைரேகை உள்ளிட்ட ஆதாரங்களை பதிவு செய்தனர். தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

X

Daily Thanthi
www.dailythanthi.com