கண்காணிப்பு கேமரா பொருத்த எதிர்ப்பு


கண்காணிப்பு கேமரா பொருத்த எதிர்ப்பு
x

அங்கன்வாடி மையங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பணியாளர்கள் 1,040 செல்போன்களை பைகளில் கட்டி எடுத்து வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

விருதுநகர்

விருதுநகர் மாவட்டத்தில் அங்கன்வாடி மையங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்துவதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்த நிலையில் பணியாளர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த மாதம் போராட்டம் நடத்தினர். இந்தநிலையில் நேற்றுமுன்தினம் கண்காணிப்பு கேமரா பொருத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்த நிலையில் நேற்று இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அங்கன்வாடி பணியாளர்கள் கலெக்டர் அலுவலகத்தில் திரண்டனர்.

மாவட்ட நிர்வாகம் அங்கன்வாடி மையங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அங்கன்வாடி பணியாளர்கள் தங்கள் செல்போன்களை மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்க முடிவு எடுத்தனர்.

அதன்பேரில் தமிழ்நாடு அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர் சங்கத்தின் தலைவர் எஸ்தர்ராணி தலைமையில் அங்கன்வாடி பணியாளர்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, தாங்கள் கொண்டு வந்த 1,040 செல்போன்களை பைகளில் கட்டி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் வைத்து சென்றனர்.

அதேபோன்று தமிழ்நாடு ஐ.சி.டி.எஸ். ஊழியர்கள் மற்றும் உதவியாளர் சங்கத்தினர் மாவட்ட தலைவர் சித்ரா தலைமையில் 60 செல்போன்களை ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் வைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து வருகிற 25 மற்றும் 26-ந் தேதிகளில் அங்கன்வாடி பணியாளர்கள் முற்றுகை மற்றும் மறியல் போராட்டங்கள் நடத்த முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.


Next Story