சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி குறித்து அவதூறு கருத்து: பதிப்பாளர் பத்ரி சேஷாத்ரி கைது


சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி குறித்து அவதூறு கருத்து: பதிப்பாளர் பத்ரி சேஷாத்ரி கைது
x
தினத்தந்தி 29 July 2023 5:05 AM GMT (Updated: 29 July 2023 5:28 AM GMT)

மணிப்பூர் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி குறித்து அவதூறு கருத்துகளை தெரிவித்தார்.

சென்னை,

கும்பகோணத்தை சேர்ந்த பதிப்பாளர் பத்ரி சேஷாத்ரி. பாஜக ஆதரவாளரும், வலதுசாரி சிந்தனையாளரும், மேடைப்பேச்சாளரும், அரசியல் விமர்சகருமான இவர் மணிப்பூர் கலவரம் குறித்து பல்வேறு தனியார் செய்தி நிறுவனங்களின் நிகழ்ச்சிகள், யூடியூப் சேனல்களில் பேட்டி அளித்து வந்தார்.

இதனிடையே, மணிப்பூர் கலவரம் தொடர்பாக சமீபத்தில் தனியார் யூடியூப் சேனலுக்கு பத்ரி சேஷாத்ரி பேட்டியளித்தார்.

அவர் கூறுகையில், மணிப்பூர் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு பெரிய அது என்ன வார்த்தையை கூறுவது என்று தெரியவில்லை. உங்களால் செய்ய முடியாவிட்டால் நாங்கள் இறங்கி செய்வோம். நம் சந்திரசூட் (சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி) கையில் துப்பாக்கியை தூக்கிக்கொண்டு மணிப்பூர் செல்லுங்கள் சார். சென்று அங்கு ஏதாவது அமைதியை கொண்டுவர முடியுமா என்று நீங்கள் பாருங்கள். சும்மா சம்மந்தம் சம்மந்தம் இல்லாமல் ஏதாவது பேசவேண்டியது. நீதிமன்றமாக நீ அரசாங்கத்திற்குள் நுழையமுடியுமா? அவர்கள் (மத்திய அரசு, மணிப்பூர் அரசு) செய்து கொண்டிருப்பதில் என்ன குறை கண்டீர்கள்?

2 பேர் அடித்துக்கொள்கிறார்கள். அது ஒரு மலைப்பாங்கான பகுதி. மிகவும் சிக்கலான நிலப்பரப்பு. அதற்குள் கொலை நடக்கத்தான் நடக்கும். அவர்கள் ஏன் அடித்துக்கொண்டார்கள்? அடித்துக்கொண்டார்கள் என்ற காரணத்தை நீங்கள் முன்கூட்டியே தடுத்திருக்க முடியுமா? அதெல்லாம் அவ்வளவு சுலபமாக முடியாது' என்றார்.

இந்நிலையில், சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி சந்திரசூட் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் அவதூறு கருத்து தெரிவித்த பத்ரி சேஷாத்ரி மீது குன்னம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் பத்ரி சேஷாத்ரியை சென்னையில் இன்று கைது செய்தனர்.


Next Story