ஓட்டல்களில் உணவு பொருட்களின் விலை உயரும் அபாயம்


ஓட்டல்களில் உணவு பொருட்களின் விலை உயரும் அபாயம்
x
தினத்தந்தி 10 July 2023 8:57 PM GMT (Updated: 11 July 2023 11:20 AM GMT)

காய்கறிகளின் விலை உயர்வால் ஓட்டல்களில் உணவு பொருட்களின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தஞ்சாவூர்

கும்பகோணம்:-

காய்கறிகளின் விலை உயர்வால் ஓட்டல்களில் உணவு பொருட்களின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கோவில் நகரம்

தமிழ்நாட்டில் மிகப்பெரிய கோவில் நகரமாகவும், சுற்றுலாத்தலமாகவும் கும்பகோணம் உள்ளது. இதனால் இந்த ஊரில் நூற்றுக்கும் மேற்பட்ட ஓட்டல்களும், 50-க்கும் மேற்பட்ட தங்கும் விடுதிகளும் உள்ளன. இதனால் தினமும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

இவ்வாறு வருபவர்கள் கும்பகோணத்தில் உள்ள ஓட்டல்களில் சாப்பிடும் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகளவில் உள்ளனர்.

ஓட்டலில் விற்பனை செய்யப்படும் உணவுப் பொருட்களின் விலை கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் கணிசமாக உயர்ந்தது.

காய்கறிகள் விலை உயர்வு

கடந்த ஒரு வாரமாக தக்காளி, சின்ன வெங்காயம், இஞ்சி, பீன்ஸ் உள்ளிட்ட காய்கறிகளின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. நேற்று தக்காளி கிலோ 100-க்கும், சின்ன வெங்காயம் ரூ.150-க்கும் விற்பனை செய்யப்பட்டது. அது மட்டுமின்றி பச்சை மிளகாய், பீன்ஸ், இஞ்சி, காலிபிளவர், அவரைக்காய் ஆகியவற்றின் விலையும் கணிசமாக உயர்ந்தது.ஓட்டல்களில் பயன்படுத்தப்படும் முக்கியமான காய்கறிகளில் தக்காளி, சின்ன வெங்காயம், பச்சை மிளகாய் ஆகியவற்றின் விலை உயர்ந்ததனால் ஓட்டல்களில் உணவு பொருட்களின் விலை உயரும் நிலை இருந்து வருகிறது.

விளைச்சல் பாதிப்பு

இதுகுறித்து ஓட்டல் உரிமையாளர் ஒருவர் கூறுகையில்,

வட மாநிலங்களில் தொடர்ந்து மழை பெய்து வருவது என்னை போன்ற ஓட்டல் உரிமையாளர்களுக்கு மிகப்பெரிய கவலையை ஏற்படுத்தியுள்ளது. தக்காளி, வெங்காயம், பீன்ஸ் உள்ளிட்டவை வட மாநிலங்களில் இருந்து லாரி மூலம் கும்பகோணம் பகுதிக்கு கொண்டு வரப்படுகிறது.

வட மாநிலங்களில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் காய்கறிகள் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக காய்கறிகளின் வரத்து குறைந்ததால் விலை உயர்ந்து காணப்படுகிறது. இதனால் உணவு பண்டங்களின் விலை கணிசமாக உயர்த்தினால் தான் தாக்குப்பிடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

உரிய சுவை கிடைக்கும்

அதுமட்டும் இன்றி ஓட்டலில் உணவு பண்டங்களின் விலை நினைத்த நேரத்திற்கு உயர்த்த முடியாது. இதனால் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை கணிசமாக குறையக்கூடும். வாடிக்கையாளர்களுக்கு சுவையாக உணவை கொடுக்க வேண்டும் என்றால் தக்காளி, சின்ன வெங்காயம் ஆகியவற்றின் அளவை குறைக்காமல் சமைத்தால் தான் உரிய சுவை கிடைக்கும். காய்கறியின் விலை தாறுமாறாக உயர்ந்துள்ள நிலையில் என்ன செய்வது என்று தெரியாமல் விழி பிதுங்கி நிற்கிறோம் என்றார்.


Next Story