அருப்புக்கோட்டையில் சாலை மறியல்
அருப்புக்கோட்டையில் சாலை மறியல் போராட்டம் நடந்தது.
அருப்புக்கோட்டை,
அருப்புக்கோட்டை நகராட்சியில் துப்புரவு பணிகளை தனியாருக்கு வழங்குவதை கண்டித்தும், ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு முறையான சம்பளத்தை வழங்க வலியுறுத்தியும் சி.ஐ.டி.யு. சார்பில் சாலைமறியல் போராட்டம் நடைபெற்றது. போராட்டம் சி.ஐ.டி.யு. நகர ஒருங்கிணைப்பாளர் தமிழ் செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. போராட்டத்தில் பங்கேற்ற ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் எம்.எஸ். கார்னர் பகுதியில் இருந்து ஊர்வலமாக சென்று நகராட்சி அலுவலகம் முன்பு 50-க்கும் மேற்பட்டோர் பந்தல்குடி சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை டவுன் போலீசார் கைது செய்தனர். மறியல் போராட்டம் காரணமாக சிறிது நேரம் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மறியல் போராட்டத்தில் சி.ஐ.டி.யு. நகர் ஒருங்கிணைப்பாளர் தமிழ் செல்வராஜ், மாநில குழு உறுப்பினர் அசோகன், ஊரக வளர்ச்சி உள்ளாட்சி ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் பாலசுப்ரமணியன், மாவட்ட உதவி தலைவர் காத்த முத்து மற்றும் பலர் கலந்து கொண்டனர்.