மேலூரில் வியாபாரிகள் சாலை மறியல்


மேலூரில் வியாபாரிகள் சாலை மறியல்
x

குப்பை கிடங்கு அருகே அமைக்கப்படும் தற்காலிக வாரச்சந்தைக்கு எதிர்ப்பு தெரிவித்து மேலூரில் வியாபாரிகள் சாலை மறியல் போராட்டம் நடத்தினார்கள்.

மதுரை

மேலூர்,

குப்பை கிடங்கு அருகே அமைக்கப்படும் தற்காலிக வாரச்சந்தைக்கு எதிர்ப்பு தெரிவித்து மேலூரில் வியாபாரிகள் சாலை மறியல் போராட்டம் நடத்தினார்கள்.

காய்கறி மார்க்கெட்

மேலூர் நகராட்சிக்கு சொந்தமான பழமையான தினசரி காய்கறி மார்க்கெட் நகராட்சி அலுவலகத்திற்கு பின்பகுதியில் உள்ளது. இங்கு உள்ள கட்டிடங்கள் பழுதடைந்த நிலையில் உள்ளன. இதனை புதுப்பிக்க ரூ.7 கோடியே 87 லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கட்டும் பணி நடைபெற உள்ளது. தற்போது நகராட்சிக்கு சொந்தமான 64 கடைகளை இடித்து புதிய கட்டிடம் கட்ட இருப்பதால் இங்கு உள்ள காய்கறி வியாபாரிகளுக்கு மாற்று ஏற்பாடாக தற்காலிக புதிய கடை அமைத்து தர சந்தைப்பேட்டையில் உள்ள வாரச்சந்தையில் ரூ.35 லட்சம் மதிப்பீட்டில் 110 தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டு வருகின்றது.

ஆனால் காய்கறி வியாபாரிகள் இங்கு நகராட்சிக்கு சொந்தமான மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை தரம் பிரிக்கும் கிடங்கு இருப்பதால் அதிலிருந்து துர்நாற்றம் வீசுகிறது என்றும், இங்கு வாரத்தில் 2 நாட்கள் மாட்டுச்சந்தை மற்றும் ஆட்டு சந்தை நடைபெறுவதால் பொதுமக்களுக்கும் வியாபாரிகளுக்கும் இடையூறு ஏற்படும் என்றும் புகார் தெரிவித்தனர்.

எனவே, தற்போது அமைக்கப்பட்டு உள்ள இடத்துக்கு பதிலாக வேறு மாற்று இடம் ஏற்பாடு செய்து தருமாறு மேலூர் நகராட்சி ஆணையாளர் ஆறுமுகத்திடம் நேரில் சென்று கோரிக்கை வைத்தனர். நகராட்சி ஆணையாளர் உங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதியில் தான் நீங்கள் வியாபாரம் செய்ய வேண்டும் என்று தெரிவித்தார். இதனை தொடர்ந்து காய்கறி வியாபார சங்கத்தலைவர் மணவாளன் ஆணையாளரிடம் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்தினார்.

சாலை மறியல்

ஆனால் இதில் எந்தவித பயனும் ஏற்படாததால் காய்கறி வியாபாரிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து நகராட்சியில் இருந்து ஊர்வலமாக சென்று செக்கடி பஜாரில் கக்கன் சிலை அருகில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த மறியலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் வியாபாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போகுமாறு கூறினர். வியாபாரிகள் காவல் துறையிடம் எங்களுக்கு நகராட்சி அருகே தற்காலிக கடைகளை அமைத்து தருமாறு கோரிக்கை வைத்தனர். அதனை தொடர்ந்து நகராட்சி அதிகாரிகளும், வியாபார சங்கத்தினரும், தாசில்தார் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தெரிவித்தனர்.


Related Tags :
Next Story