தடுப்பணை கட்டக்கோரி சாலை மறியல்


தடுப்பணை கட்டக்கோரி சாலை மறியல்
x

திருமானூர் கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணை கட்டக்கோரி சாலை மறியலில் ஈடுபட்ட 38 பேரை போலீசார் கைது செய்தனர்.

அரியலூர்

தடுப்பணை கட்ட வேண்டும்

அரியலூர் மாவட்டம் குருவாடி கிராமத்திற்கும் தஞ்சை மாவட்டம் கபிஸ்தலம் கிராமத்திற்கும் இடையில் செல்லக்கூடிய கொள்ளிடம் ஆற்றில் ஜல்ஜூவன் திட்டத்தால் நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு கூட்டுக் குடிநீர் திட்டம் கொண்டு செல்வதற்காக ராட்சத போர்வெல் அமைக்க அதிகாரிகள் கடந்த மாதம் அளவிடும் பணியை மேற்கொண்டனர்.

அப்போது குருவாடி உள்ளிட்ட அப்பகுதியை சேர்ந்த கிராம மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். கடந்த ஆட்சியில் குருவாடி பகுதியில் கொள்ளிடம் ஆற்றில் கதவணையுடன் கூடிய தடுப்பணை கட்டும் திட்டம் செயல்படுத்த இருந்தநிலையில், தற்போதைய தி.மு.க. அரசு அதனை ரத்து செய்து ராட்சத போர்வெல் கிணறு அமைக்க முயற்சிப்பதால் எங்களது நீராதாரம் முற்றிலும் பாதிக்கப்படும் என குற்றம் சாட்டும் அப்பகுதி மக்கள் உடனடியாக கதவணையுடன் கூடிய தடுப்பணை கட்ட வேண்டும் என கோரிக்கை வைத்து போராட்டத்தில் ஈடுபட தொடங்கினர்.

சாலை மறியல்

மேலும் ராட்சத போர்வெல் கிணறு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சித்தனர். அப்போது போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் தள்ளு-முள்ளு ஏற்பட்ட நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். இச்சம்பவத்தை தொடர்ந்து அப்பகுதியின் 10-க்கும் மேற்பட்ட கிராமங்களை மக்கள், அனைத்து அரசியல் கட்சிகள், விவசாயிகள் ஒன்றிணைந்து தொடர்ந்து ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் போன்ற போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

அதன் தொடர்ச்சியாக நேற்று கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கதவணையுடன் கூடிய தடுப்பணை அமைத்து இப்பகுதியை குடிநீர் மண்டலமாக அமைக்க வலியுறுத்தி திருமானூர் பஸ் நிலையம் முன் அரியலூரில் இருந்து தஞ்சை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

38 பேர் கைது

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், எங்கள் பகுதியில் முன்னதாக திருமழபாடி, மஞ்சமேடு, திருமானூர், விளாங்குடி, வில்லியநல்லூர், செம்மங்குடி, அணைக்குடி, வீரமாங்குடி ஆகிய இடங்களில் கூட்டுக்குடிநீர் திட்டங்கள் அமைத்து தினமும் கோடிக்கணக்கான லிட்டர் தண்ணீர் உறிஞ்சப்படுகிறது. மீண்டும் மற்றொரு ராட்சத போர்வெல்லா? இதைத் தாங்குமா இந்த பூமி, பசுமையான எங்களது பகுதி பாலைவனமாக மாறிவிடும்.ஆகையால் நாகப்பட்டினம் கடல்நீரை குடிநீராக மாற்றிக் கொள்ளுங்கள். எங்கள் பகுதிக்கு கதவணையுடன் தடுப்பணை கட்டி கொடுங்கள் என பல்வேறு கோஷங்களை எழுப்பினர். மேலும் எங்களின் கோரிக்கை நிறைவேறும் வரை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம் எனவும், அடுத்த கட்டமாக மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட இருப்பதாகவும் தெரிவித்தனர். இதனையடுத்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 38 பேரை திருமானூர் போலீசார் கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.


Next Story