தர்மபுரி-பொம்மிடி பகுதிகளை இணைக்கமலைப்பாதை வழியாக சாலை அமைக்க வேண்டும்இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன் பேட்டி


தர்மபுரி-பொம்மிடி பகுதிகளை இணைக்கமலைப்பாதை வழியாக சாலை அமைக்க வேண்டும்இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன் பேட்டி
x
தினத்தந்தி 1 Jun 2023 5:00 AM GMT (Updated: 1 Jun 2023 5:01 AM GMT)
தர்மபுரி

நல்லம்பள்ளி

தர்மபுரி-பொம்மிடி பகுதிகளை இணைக்க, கோம்பேரி, காளிகரம்பு மலைப்பாதை வழியாக இணைப்பு சாலை அமைக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கூறினார்.

மலைப்பாதையில் சாலை

தர்மபுரி மாவட்டம் மிட்டாரெட்டிஅள்ளி ஊராட்சி கோம்பேரி, காளிகரம்பு மலைப்பாதை வழியாக, தர்மபுரி-பொம்மிடியை இணைக்கும் வகையில் மலைபாதை சாலை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை 100-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வலியுறுத்தி வருகிறார்கள். இந்த மலைப்பாதையில் சாலை அமைக்க வேண்டிய பகுதியை இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். அப்போது கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் உடன் இருந்தனர்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான மலை பாதையில் 1.5 கிலோமீட்டர் தூரம் சாலை அமைத்து, தர்மபுரி மற்றும் பொம்மிடி பகுதிகளை இணைக்க இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்பது வியப்பாக உள்ளது. இங்குள்ள விவசாய தொழிலாளிகள், பொதுமக்கள் பயன்பெறும் வகையில் இந்த 1.5 கிலோமீட்டர் சாலையை மலைப்பாதையில் அமைக்க அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

2 லட்சம் மக்களுக்கு பயன்

இந்த இணைப்பு சாலை அமைத்தால் தர்மபுரியில் இருந்து பொம்மிடி மற்றும் சேலம் மாவட்டத்திற்கு செல்வது எளிதாக இருக்கும். 30 கிலோமீட்டர் முதல் 50 கிலோமீட்டர் வரை சுற்றி செல்வது குறையும். இதன் மூலம் சுமார் 2 லட்சம் மக்கள் பயன்பெறுவார்கள். எனவே தமிழ்நாடு அதரசு தர்மபுரி-பொம்மிடி பகுதிகளை இணைக்க, கோம்பேரி, காளிகரம்பு மலைப்பாதை வழியாக இணைப்பு சாலை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இதே பகுதியில் உயர்கோபுர மின் பாதை அமைக்க அனுமதி அளித்து, மின் கோபுரங்கள் அமைக்கப்பட்டு செயல்படுகின்றன. எனவே நூற்றுக்கணக்கான கிராம மக்கள் பயன்பெறும் வகையில் இந்த மலைப்பாதையில் இணைப்பு சாலை அமைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story