ராகுல்காந்தி மேல்முறையீடு மனு தள்ளுபடி:சேலத்தில் காங்கிரசார் சாலைமறியல்ஆத்தூரில் தரையில் படுத்து போராட்டம் நடத்தியதால் பரபரப்பு


ராகுல்காந்தி மேல்முறையீடு மனு தள்ளுபடி:சேலத்தில் காங்கிரசார் சாலைமறியல்ஆத்தூரில் தரையில் படுத்து போராட்டம் நடத்தியதால் பரபரப்பு
x
சேலம்

சேலம்

ராகுல்காந்தியின் மேல்முறையீடு மனு தள்ளுபடி செய்யப்பட்டதால் சேலத்தில் காங்கிரசார் சாலைமறியலில் ஈடுபட்டனர். ஆத்தூரில் தரையில் படுத்து போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

தள்ளுபடி

அவதூறு வழக்கில் விதிக்கப்பட்ட 2 ஆண்டுகள் தண்டனையை எதிர்த்து காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ராகுல்காந்தியின் மேல் முறையீட்டு மனுவை குஜராத் உயர்நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது. இதையடுத்து தமிழகத்தில் மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் போரட்டம் நடத்தினர்.

அதன்படி சேலம் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் பலர் நேற்று முள்ளுவாடி கேட் அருகே உள்ள கட்சி அலுவலகத்தில் ஊர்வலமாக கலெக்டர் அலுவலகம் அருகே வந்தனர். இதற்கு மாநகர பொருளாளர் ராஜகணபதி தலைமை தாங்கினார். கலெக்டர் அலுவலகம் வந்த போது போலீசார் தடுப்புகளை வைத்து அவர்களை தடுத்து நிறுத்தினர்.

சாலை மறியல்

பின்னர் அவர்கள் ராகுல்காந்தி மீது பொய்வழக்கு போட்டு 2 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி எம்.பி. பதவியை பறித்த மத்திய அரசை கண்டித்து திடீரென சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அவர்கள் ராகுல்காந்தி மீது போடப்பட்ட பொய் வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்றும், மத்திய அரசை கண்டித்தும் கோஷமிட்டனர்.

இதையடுத்து அவர்களிடம் டவுன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அதைத்தொடர்ந்து காங்கிரசார் போராட்டத்தை கைவிட்டுவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

ஆத்தூர்

இதேபோல் ஆத்தூர் பழைய பஸ் நிலையம் முன்பு காங்கிரஸ் கட்சியினர் கிழக்கு மாவட்ட தலைவர் எஸ்.கேஅர்த்தனாரி தலைமையில் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது எஸ்.கேஅர்த்தனாரி தரையில் படுத்து கோஷங்கள் எழுப்பியதால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது. இந்த போராட்டத்தில் மாவட்ட பொருளாளர் ஆர்.ஓசுமணி, மாவட்ட பொது செயலாளர்கள் சங்கரய்யா, பாஸ்கர், மாநில பொதுக்குழு உறுப்பினர் கனகராஜ், வட்டார தலைவர்கள் வெங்கடேஷ், சாமி, குருசேவ், ரவிக்குமார், பன்னீர்செல்வம், ஜே.பி.கிருஷ்ணா, இளைஞர் காங்கிரஸ் மாநில செயலாளர் அருளானந்தம், அரவிந்த், மாவட்ட செயலாளர் சம்பத், கெங்கவல்லி நகர தலைவர் சிவாஜி உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். மறியலில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.


Next Story