நாமக்கல்லில் இளம்பெண் சாவு:உறவினர்கள் சாலைமறியல் முயற்சி


நாமக்கல்லில் இளம்பெண் சாவு:உறவினர்கள் சாலைமறியல் முயற்சி
x

நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் இளம்பெண் சிகிச்சை பலன்இன்றி இறந்த நிலையில், அவரை தற்கொலைக்கு தூண்டிய 3 பேரை கைது செய்யக்கோரி உறவினர்கள் சாலைமறியலில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

நாமக்கல்

கள்ளத்தொடர்பு

நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அருகே உள்ள கஸ்தூரிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் மணிவாசகம். இவரது மனைவி விஜயா. இவர்களுக்கு அகிலா (வயது23), இளவரசி (21) என்கிற 2 மகள்களும், அபினேஷ் என்கிற மகனும் உள்ளனர்.

இளவரசிக்கு திருமணமாகி கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, அவர் கணவரை பிரிந்து தாயாருடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் இளவரசிக்கும், அதே பகுதியை சேர்ந்த அண்ணன் முறையில் உள்ள, திருமணமான வாலிபர் ஒருவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இது மற்றவர்களுக்கு தெரியவரவே ஊர் பெரியவர்கள் இருவரையும் கண்டித்து அனுப்பி உள்ளனர்.

சாலைமறியல் முயற்சி

இதற்கிடையே அந்த வாலிபரின் மனைவி மற்றும் தந்தை ஆகிய இருவரும், சம்பவத்தன்று இளவரசியை தாக்கி உள்ளனர். இதனால் மனம் உடைந்த இளவரசி வீட்டிற்குள் சென்று தூக்குப்போட்டு கொண்டதாக கூறப்படுகிறது. அவரை அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு, நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

அங்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த இளவரசி நேற்று சிகிச்சை பலன்இன்றி இறந்து விட்டார். இது குறித்து தகவல் அறிந்ததும் அவரது உறவினர்கள் நாமக்கல் அரசு ஆஸ்பத்திரி முன்பு திரண்டனர். அவர்கள் இளவரசி சாவுக்கு காரணமான 3 பேரையும் கைது செய்ய வலியுறுத்தி சாலைமறியலில் ஈடுபட முயன்றனர்.

தகவல் அறிந்ததும் அங்கு விரைந்து வந்த நாமக்கல் துணை போலீஸ் சூப்பிரண்டு தனராசு மற்றும் போலீசார் அவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பிரேத பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில் மேல் நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்ததை தொடர்ந்து, அங்கிருந்து கலைந்து சென்றனர். இச்சம்பவம் நேற்று நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story